Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குழாயில் ஒரு சொட்டு நீர் கூட கசியக்கூடாது; பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை

Print PDF

தினமலர்       20.04.2017

குழாயில் ஒரு சொட்டு நீர் கூட கசியக்கூடாது; பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் அறிவுரை

சென்னை : சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள குடிநீர் வாரியம், நிலத்தடி நீரை மோட்டார் மூலம் உறிஞ்ச, ஒன்பது மணிநேரம் இடைவெளி தர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பருவமழை பொய்த்ததால், சென்னையில் ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைத்திட, சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது.பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை முறையாக பயன்படுத்துவதுடன் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை

சமாளிக்க குடிநீர் வாரியத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

சென்னை நகரின் குடிநீர் தேவை, 830 மில்லியன் லிட்டர். கடந்த மாதம் வரை, இந்தளவு குடிநீரை வாரியம் வினியோகித்து வந்தது. தற்போது பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மீண்டும் பருவமழை பெய்து, குடிநீர் ஆதாரம் கிடைக்கும் வரை குடிநீர் வினியோகத்தின் அளவு, 550 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த அளவை மேலும் குறைக்காமல் இருக்க, வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், வீடுகளில் பயன்படுத்தும் குழாயிலோ, தெருக்குழாயிலோ ஒரு சொட்டு நீர் கூட கசியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குழாயில், ஒரு சொட்டு நீர், 10 மணிநேரம் தொடர்ந்து கசிந்தால், 20 லி., தண்ணீர் வீணாகும். ஒரு வீட்டில், 20 லி., தண்ணீர் என, சென்னையில் உள்ள, 10 லட்சம் வீடுகளில் நீர் கசிந்தால், தினமும், 2 கோடி லி., நீர் வீணாகும்.

இதை கருத்தில் கொண்டு, குழாய்களை மூடி வைக்க வேண்டும். மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் போது, ஒன்பது மணிநேர இடைவெளி தர வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீரூற்று சீராக இருக்கும். மின்மோட்டாரை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் மின்சாரம் வீணாவது மட்டுமல்லாது நிரூற்றிலும் தடை ஏற்படும்.

வானிலை ஆய்வு மையம், இந்த ஆண்டு கோடை மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். அவற்றை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்தால், மழை பெய்யும் போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்வதோடு, நிலத்தடி நீரின்

தன்மையும் மேம்படும்.பொதுமக்களுக்கும் அத்தகைய குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்        19.04.2017

முறைகேடான 1,732 குடிநீர் இணைப்புகள்...துண்டிப்பு!மாவட்டத்தில் 173 மோட்டார்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், முறைகேடாக பயன்படுத்தி வந்த 1,732 குடிநீர் இணைப்புகளை உள்ளாட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். மேலும், 173 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க, அதன் எதிரொலியாக, குடிநீர் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம், 2015ல் பெய்த பெருமழைக்கு பின் ஓரளவு கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு, வட கிழக்கு பருவ மழை பொய்த்த பின், குடிநீர் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது என, நீராதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு, ஓங்கூர் ஆறு மற்றும் 912 ஏரிகள், நுாற்றுக்கணக்கான குளங்கள் என, மாவட்டம் முழுவதும் ஏராளமான நீர்நிலைகள் இருந்த போதும், குடிநீர் பிரச்னை தீராமல் உள்ளது.

குடிநீர் திருட்டு

குடிநீர் பிரச்னைக்கு மற்றொரு காரணமாக, முறைகேடான குடிநீர் இணைப்புகள், ஊராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் முளைத்து வருகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களில், திருட்டுத்தன மாக குழாய் அமைத்து மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுகிறது.சில இடங்களில் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுமே இந்த முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அவற்றை முறையாக கண்காணித்து உடனடியாக அந்த குடிநீர் இணைப்புகளை துண்டிக்க சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சிகளில் முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்டறிதல், மோட்டார்களை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.கோடைகாலம் துவங்கியது முதல் முறைகேடான இணைப்புகள் குறித்து, மாவட்ட ஆட்சியர், பொன்னையாவிடம் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஊராட்சி ஒன்றியங்களில் 2,036 முறைகேடான இணைப்புகள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதில், 1,627 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 41 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல், நகராட்சிகளில், 23 முறைகேடான இணைப்புகள் துண்டிக்கப் பட்டு, 109 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கை

பேரூராட்சிகளில், 82 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 23 மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முறையாக வரி செலுத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் குடிநீரை, முறைகேடாக உறிஞ்சும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. முறைகேடான குடிநீர் இணைப்புகள் அனைத்தும் விரைவில் துண்டிக்கப்படும் என, உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு

Print PDF

தினமலர்          19.04.2017

வண்டலூர் பேருந்து நிலைய வரைபடம்திருப்தியில்லை! புதிய குழு அமைக்க சி.எம்.டி.ஏ., உத்தரவு

வண்டலுார் கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு, ஒப்பந்தநிறுவனம் தயாரித்த வரைபடம் திருப்திஅளிக்க வில்லை என்பதால், புதிய குழு அமைக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்து நெரிசல் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வருவாய் துறை, 85 ஏக்கர் நிலத்தை சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒப்படைத்துள்ளது. இந்நிலத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்துக்கான வரைபடம் தயாரிப்பது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கலந்தாலோசனை பணிக்கான தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

ஒப்பந்தம் பெற்றதில் இருந்து, மூன்று மாதங்களுக்குள், புதிய பேருந்து நிலையத்தின் வரைபடத்தை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்படி, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மாதிரி வரைபடத்தை, சி.எம்.டி.ஏ.,வுக்கு அளித்தது.

இந்த வரைபடத்தை ஆய்வதற்கான கூட்டம், சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் அண்மையில் நடந்தது. அதில் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த வரைபடம் குறித்து விளக்கப்பட்டது.ஆனால், ஒருங்கிணைந்த தன்மை இன்றி, தனியான பேருந்து நிலையமாக அது இருந்ததால், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அதிருப்தி அடைந்தார். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனால் வண்டலுார் பேருந்து நிலைய திட்டம் சிக்கலாகியுள்ளது.
மாற்றம்!

தென் மாவட்ட பேருந்துகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல், மாநகர பேருந்துகள், மெட்ரோ, மோனோ, புறநகர் மின்சார ரயில் சேவைகளுடன் இணைப்பது, தனியார் வாகனங்கள் வந்து செல்வது என, ஒருங்கிணைந்த வகையில், வரைபடத்தை மாற்றி தாக்கல் செய்ய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக, இரண்டு தலைமை திட்ட அதிகாரிகள், இரண்டு மூத்த திட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுஉள்ளது. இக்குழுவினர், ஒப்பந்த நிறுவனத்துடன் கலந்து பேசி, புதிய வரைபடத்தை தயார் செய்வர்.சி.எம்.டி.ஏ., உயரதிகாரி

சர்ச்சை!
முதல்வர் சட்டசபையில் அறிவித்த, இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது இதில் தெரியவருகிறது.இதற்கான டெண்டரில், 'ஒருங்கிணைந்த' என்ற நோக்கம் தெளிவாக குறிப்பிடப்படாததால், கலந்தாலோசனை நிறுவன வரைபடம் நிராகரிக்கப்படும் நிலைக்கு சென்றுள்ளது. இது போன்ற அலட்சிய அதிகாரிகளை வைத்து, எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த முடியாது.நகரமைப்பு வல்லுனர்கள் - நமது நிருபர் -

 


Page 13 of 3988