Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினகரன்           07.04.2017

வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்கள் பறிமுதல் : அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் முறைகேடாக குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வேலூரில் கோடைகாலம் தொடங்கியது முதல் தினமும் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வேலூர் நகரில் மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒருமுறை என குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஒருசிலர் குடிநீர் இணைப்பு பெறாமல் முறைகேடாக மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி விடுகின்றனர். எனவே முறைகேடாக குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கமிஷனர் குமார் உத்தரவின்பேரில் உதவி பொறியாளர் செந்தில் தலைமையிலான அதிகாரிகள் வேலூர் மாநகராட்சியில் கஸ்பா, பயர் லைன், பெரிய மசூதி தெரு, யாகூப் சாகிப் தெரு என 54 மற்றும் 55வது வார்டுகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முறைகேடாக வீடுகளில் குடிநீர் உறிஞ்சிய 10 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அனுமதியின்றி இணைப்பு வைத்திருந்த குழாய் இணைப்புகளையும் துண்டித்தனர். மேலும் தொடர்ந்து முறைகேடாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

கோயம்பேட்டில் 10 கடைகளுக்கு 'சீல்' சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர்      07.04.2017

கோயம்பேட்டில் 10 கடைகளுக்கு 'சீல்' சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிரடி

கோயம்பேடு: கோயம்பேடு மார்க்கெட்டில், பராமரிப்பு வரி கட்டாத மற்றும் அனுமதி பெறாத, 10 கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில், 3,000க்கும் மேற்பட்ட பூ, பழம், காய்கறி மொத்த விற்பனை கடைகள், சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. மார்க்கெட் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணியை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இயங்கும், மார்க்கெட் நிர்வாக குழு கவனிக்கிறது.

இங்கு கடைகள் அமைக்க, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறுவோருக்கு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மாதம்தோறும், சதுரடிக்கு ஒரு ரூபாய் என, பராமரிப்பு தொகையும் வழங்க வேண்டும்.

இந்நிலையில், அங்கு, விதியை மீறி, நடைபாதைகளை ஆக்கிரமித்து, பலர் கடை நடத்துகின்றனர். இதுகுறித்த புகார்களை அடுத்து, ஆக்கிரமிப்பு கடைகளை, அதிகாரிகள் அகற்றி

வருகின்றனர்.

சி.எம்.டி.ஏ., சார்பில் அனுமதி பெறாமலும், உரிமத்தை புதுப்பிக்காமல், பராமரிப்பு வரி கட்டாமலும் உள்ள, 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், நேற்று, 'சீல்' வைத்தனர்.

400 கடைகள்

கடந்த, 2013ல் இருந்து, பராமரிப்பு வரி வழங்காத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத கடைகளுக்கு, 'சீல்' வைத்துள்ளோம். இன்னும், 400க்கும் மேற்பட்ட கடைகள், உரிமம் பெறாமல் உள்ளன. விரைவில் அவற்றுக்கும், 'சீல்' வைக்கப்படும்.

 

உள்ளாட்சிகள் அதிகாரம் வீட்டு வாரியத்துக்கு மாற்றம்

Print PDF

தினமலர்     07.04.2017

உள்ளாட்சிகள் அதிகாரம் வீட்டு வாரியத்துக்கு மாற்றம்

தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. தற்போது, சென்னை நொளம்பூர் புறநகர் திட்டத்தில், 84 வீடுகள்; அரியலுார் மாவட்டம், கரும்பஞ்சாவடியில், 171 வீடுகள்; தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், 10 வீடுகள்.காஞ்சிபுரம் புறநகர் திட்டத்தில், 141 வீடுகள் உட்பட, சில திட்டங்கள், தற்போது செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களை, நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம், திட்டங்களுக்கான அனுமதி விண்ணப்பம் பெறுவது, ஒப்புதல் அளிப்பது, கட்டு மான பணியை நெறிப்படுத்துவது, சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புகள் வழங்குவது, மின் இணைப்பு வழங்குவது போன்ற அதிகாரங்கள், சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன.திட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், நிர்வாக வசதிக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்த அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியத்துக்கு கூடுதலாக வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்புகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது.

அதிருப்தி : திருவள்ளூர் மாவட் டம், திருமழிசை துணை நகர திட்டத்தை தொடர்ந்து தற்போது, ஐந்து குடியிருப்பு திட்டங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் வீட்டுவசதி வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை, வீட்டுவசதி வாரியம் கைப்பற்றுவது, உள்ளாட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

 


Page 15 of 3988