Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

 தி இந்து        24.05.2018

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 24,000 பேருக்கு இலவசமாக 2 செட் சீருடைகளை வழங்குவதற்காக ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் சொந்த செலவிலேயே சீருடைகளை வாங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

2018-19 நிதியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 24,195 என மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்க உள்ளது. அதற்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும்போது, அவர்களுக்கு சீருடைகளை வழங்கும் விதமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

 

மனை வரன்முறை வரைபடங்களை வெளியிட டி.டி.சி.பி., ஆலோசனை

Print PDF

தினமலர்              24.05.2018  

மனை வரன்முறை வரைபடங்களை வெளியிட டி.டி.சி.பி., ஆலோசனை

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., வழியை பின்பற்றி, நகர் ஊரமைப்புத்துறையான, டி.டி.சி.பி., பகுதிகளில் வரன்முறை செய்யப்படும், லே - அவுட் வரைபடங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.ஆர்வம் இல்லைதமிழகத்தில், 2016 அக்., 20க்கு முன் அங்கீ காரமின்றி உருவான மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், 2018 நவ., 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இத்திட்டத்தில் பங்கேற்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதில், சில சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் விண்ணப்பிக்க துவங்கி உள்ளனர்.சி.எம்.டி.ஏ., பகுதியை விட, டி.டி.சி.பி., பகுதிகளில் அதிக விண்ணப்பங்கள் வருகின்றன. வரன்முறைப் பணிகளும் விரைவாக நடப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனைகள் வரன்முறை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், வரன்முறை ஒப்புதல் வழங்கப்பட்ட, லே - அவுட் வரைபடங்களை, சி.எம்.டி.ஏ., பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு, பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.வரன்முறைஇது குறித்து, டி.டி.சி.பி., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சி.எம்.டி.ஏ., போல், டி.டி.சி.பி., பகுதிகளிலும் வரன்முறை செய்யப்பட்ட, லே - அவுட் வரைபடங்களை இணையதளத்தில் வெளியிட, ஆலோசித்து வருகிறோம். இந்த பணிகளை, உள்ளூர் திட்ட குழும அளவிலேயே மேற்கொள்ளவும், ஆலோசனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

 

சென்னையில் 45 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

Print PDF

தி இந்து     22.05.2018

சென்னையில் 45 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கை சென்னையில் நேற்று தொடங்கி வைத்து பயிற்சிக் கையேட்டை வெளியிடுகிறார் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள 550 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அடுத்த 45 ஆண்டுகளுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசியதா வது:

2011-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் குடிநீர் தேவை 1921 டிஎம்சி ஆக இருந்தது. இது 2050-ம் ஆண்டில் 2,039 டிஎம்சி ஆக உயரக்கூடும். அதை சமாளிக்க, அரசின் ‘தொலைநோக்கு திட்டம் -2023’ ஆவணப்படி, தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல் படுத்த ரூ.21 ஆயிரம் கோடியில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீரின் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள பெரிய இடைவெளியை குறைப்பதற்கு ஏரி, குளங்களில் இதுவரை பயன்படுத்தப் படாமல் உள்ள நீரைச் சுத்தி கரித்து பயன்படுத்துவது, கடல் நீரைக் குடிநீராக மாற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள 206 நீர்நிலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதைச் சமாளிக்க நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் நிறைவடைந்த பின், அடுத்த 45 ஆண்டுகளுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் அசோக் நடராஜன், நகர்ப்புற மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் சந்திரகாந்த் காம்ப்ளே, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண் இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 3 of 3988