Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது

Print PDF

தி இந்து    22.05.2018

மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது

உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் ஆய்வு செய்த தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள்.   -  படம்: எஸ். ஜேம்ஸ்

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் தமிழர் கலை, பாரம்பரியக் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கும் முதல்கட்டப் பணி ரூ.15 கோடியில் தொடங்கி உள்ளது.

1981-ல் 5-வது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றபோது, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இத்திட்டம் 33 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.

ரூ.25 கோடியில் கட்டிடம்

2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உலகத் தமிழ்ச் சங்கத்துக்கென ரூ.100 கோடியை ஒதுக்கினார். அதில் ரூ.25 கோடியில் உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு என பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்படும் என அறிவித்தார்.

இதன்படி மதுரை அரசு சட்டக்கல்லூரி அருகே 14.15 ஏக்கரில் அமைந்த இச்சங்க கட்டிடம் 2016-ல் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. சுமார் 1 லட்சம் சதுரடியை கொண்ட இக்கட்டிடம் பல்வேறு வசதிகளைக் கொண்டு செயல்படுகிறது.

இச்சங்கக் கட்டிடத்துக்குள் நுழைந்தாலே தமிழர் கலை, வாழ்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்துடன் அருங்காட்சியகம் அமைக்க, அதன் இயக்குநர் கா.மு.சேகர் நடவடிக்கை எடுத்தார்.

முதல் கட்டமாக ரூ.15 கோடியில் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பணிகள் தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (பூம்புகார்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பாபு ஆலோசனையின்பேரில், அத்துறையைச் சேர்ந்த குழுவினர் நேற்று ஐந்திணைப் பூங்கா, அருங்காட்சியகம் அமையவிருக்கும் இடங்களை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் கா.மு.சேகர் கூறியதாவது: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் அமையவிருக்கும் அருங்காட்சியகம் இன்னும் 2 ஆண்டில் தமிழரின் வாழ்வியலை எடுத்துரைக்கும் காட்சியகமாக மாறும். நமது நாகரிகம், கலை, இலக்கியம், போர்முறைகள், பண்பாடு, விளையாட்டு உட்பட பல்வேறு தகவல்களை அறியும் இடம், சிந்தனையைத் தூண்டும் மையமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. எழுத்து வடிவில் படிப்பதைவிட ஒன்றை காட்சிப்படுத்தும்போது எளிதில் அது மனதில் பதியும்.

ஐந்திணைப் பூங்கா

உலக தமிழ்ச் சங்கத்தின் நுழைவுவாயிலை பார்த்தாலே அனைவரையும் கவரும் வகையில், நமது பாரம்பரிய ஜல்லிக்கட்டுக் காளை உள்ளிட்ட கலைப் பொருட்களால் அழகுப்படுத்தப்படும். அருங்காட்சியகத்தில் ஓவியம், கல், மர சிற்பங்கள், புடைப்பு சிற்பம், சுடுமண் சிற்பம், போர் கருவிகள், அறிவியல், விவசாயம், மருத்துவம், மெய் நிகர் காட்சிகள், பழந்தமிழ் வாழ்வியல் பொருட்கள் சேகரிப்பு உட்பட 328 கலைப் பொருட்களை இடம்பெறச் செய்ய உள்ளோம். இதற்காக 80-க்கும் மேற்பட்ட மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களின் தன்மையை விளக்கும் வகையில், அழகிய ஐந்திணைப் பூங்கா ஒன்று அமைகிறது. ஐந்து நிலங்களின் தன்மை, செயல்பாடு எப்படி இருக்கும். இந்த நிலங்களில் வாழும் உயிரினங்களை அருகில் சென்று பார்க்கவும், இயற்கையை இசை நயத்துடன் ரசிக்கவும் 12டி கோணத்தில் பார்க்க, பிரம்மாண்ட தியேட்டர் ஒன்றும் அமைக்கப்படுகிறது.

தமிழ்த்தாய் சிலை

உலகத் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தை சுற்றிலும் தத்ரூபமாக பல்வேறு சிற்பங்கள் நிறுவப்படும். இவ்வளாகத்தில் நுழைந்தாலே தமிழரின் வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிதியில் ரூ.16 கோடியில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படுகிறது. இரண்டரை கோடியில் ஐந்திணை காட்சியகமும், பிற பணிகளும் நடக்கவுள்ளன. தற்போது முதல்கட்ட நிதி ரூ.15 கோடியில் பணியைத் தொடங்கி உள்ளோம். அடுத்தாண்டு ரூ.20 கோடியும், அடுத்து ரூ.15 கோடியும் தமிழக அரசு வழங்க உள்ளது. 3 ஆண்டுக்குள் அருங்காட்சியகப் பணி முடிந்து, கட்டடம் முழுவதுமே காட்சியகமாக மாறும். இதுதவிர, பிரம்மாண்ட நூலகம், போட்டித் தேர்வர்களுக்கான நூலகம், உலகளவில் நூலகங்கள் படிக்கும் வகையிலான மின் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு, மூன்றாண்டில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அனைத்து தரப்பிலும் பேசப்படும் அருங்காட்சியகமாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

பாதாள சாக்கடை இணைப்பு, 'கட்'

Print PDF

தினமலர்      28.11.2017

பாதாள சாக்கடை இணைப்பு, 'கட்'

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சியில், பல ஆண்டுகளாக, பாதாள சாக்கடை இணைப்புக்கு, கட்டணம் செலுத்தாத, 10 அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

பல்லாவரம் நகராட்சியில், 75.33 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இங்கு இதுவரை, 22 ஆயிரத்து 520 வீட்டு கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு வைப்பு தொகை, 10 ஆயிரம் ரூபாய் என்றும்,மாத கட்டணம் 150 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடுபட்ட பகுதிகளில், 24.06 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடை திட்ட கட்டணம் செலுத்தாத குடியிருப்புகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 10 அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கட்டணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.அந்த இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

 

பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது! டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

Print PDF
தினமலர்      26.11.2017

பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் உயர்வு: ரூ.50... ஆயிரமாகிறது! டிச., 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

 

கோவை;சொத்து வரி மறுசீராய்வு, குப்பை வரியை தொடர்ந்து, குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்த்த, கோவை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. அதற்கு முன், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை, 40 மடங்கு உயர்த்த உள்ளது. அதாவது, தற்போது ரூ.5 செலுத்தி பெறப்படும் சான்றுக்கு, இனி, 200 ரூபாய் செலவிட நேரிடும். இப்படி 4 நகல்களுடன் ரூ.50க்கு பெறப்பட்ட சான்று இனி, 1,000 ரூபாய்க்கே பெற முடியும்.

ஒரு மனிதனின் வாழ்வில் பிறப்பும், இறப்பும் மாநகராட்சியுடன் இணைந்திருக்கிறது. சுகாதாரப் பிரிவு மூலமாக இவ்விரு சான்றுகளும் வழங்கப்படும். மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ குழந்தை பிறந்தால், அருகாமையில் உள்ள வார்டு அலுவலகத்தில் பதிய வேண்டும்.

பின், பெயருடன் கூடிய சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். மயானத்தில் வழங்கும் சான்று நகல் இணைத்தால் மட்டுமே, இறப்பு சான்று வழங்கப்படும். சான்று வாங்க மக்களை அலைக்கழிக்க கூடாது என்பதற்காக, வீட்டு முகவரிக்கு, 'கூரியர்' சேவை மூலமாக அனுப்பப்படுகிறது.

கோவையில் தற்போது ஒரு பிறப்பு சான்று பெற கட்டணம் ரூ.5, கூடுதலாக பெறப்படும் ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.5 வசூலிக்கப்படும். 5 சான்று பெற ரூ.25, கூரியர் கட்டணம் ரூ.25 என, ரூ.50 வசூலிக்கப்படுகிறது. இறப்பு சான்றுக்கும் இதே கட்டணம்.

தற்போது ஒரு சான்று பெற ரூ.200 என கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. கூடுதல் நகல் பெற, தலா ரூ.200 செலுத்த வேண்டும். அசல் சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதலாக 4 நகல் கேட்டால் ரூ.800, தபால் கட்டணம் சேர்த்து, 1,025 ரூபாய் வரை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுவரை ரூ.50 செலுத்தினால், 5 சான்று பெற்றவர்கள், இனி, ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை செலவிட வேண்டி இருக்கும்.

தாமதக் கட்டணமும்...

பிறப்போ, இறப்போ, 21 நாட்களுக்குள் பதிய வேண்டும். 21 நாட்களில் இருந்து, 30 நாட்களுக்குள் பதிந்தால், தாமதக்கட்டணம் ரூ.2, ஓராண்டுக்குள் பதிந்தால், ரூ.5, ஓராண்டுக்குபின் பதிந்தால், ரூ.10 என, வசூலிக்கப்பட்டது.

இக்கட்டணம் ரூ.500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், தேடுதல் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டது. இது, 100 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அக்., மாதமே அமல்படுத்தி இருக்க வேண்டும். மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக, கட்டணத்தை உயர்த்தவில்லை.

'தணிக்கைத்துறை ஆட் சேபனை ஏற்படக்கூடிய சூழல் வரலாம் என்பதால், மாமன்றத்தில் பதிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தப்படும். புதிய கட்டண விகிதங்கள், டிச., 1 முதல் நடைமுறைக்கு வரும். கட்டணம் அதிகம் என்றாலும், அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டிய இடத்தில், நாங்கள் இருக்கிறோம்' என்றனர்.

அசலுக்கும், நகலுக்கும்ஒரே கட்டணம் எதற்கு?

ரூ.5க்கு வழங்கி வந்த பிறப்பு, இறப்பு சான்று கட்டணத்தை ரூ.200 ஆக, தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. ஒரே நேரத்தில், 40 மடங்கு உயர்வாகி உள்ளது. நகல் வாங்கவும் ரூ.200 என நிர்ணயம் செய்திருப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு துறை தொடர்பான சில பணிகளுக்கு அசல் பிறப்பு சான்றுகளே கேட்கப்படுகின்றன. அதனால், சான்று கேட்டு விண்ணப்பம் செய்வோர், 4 நகல் பெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் பணம் கேட்பது, மக்களை சிரமப்படுத்துவதாக அமையும். அதனால், நகல் சான்று பெறுவதற்கு, 'பிரிண்ட்' எடுக்க தேவைப்படும் காகித செலவினத் தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

'கசக்கி பிழியும் செயல்'உள்ளாட்சி தேர்தல் நடக்காததால், நிர்வாகம் நடத்தவே, தனி அதிகாரி என்கிற அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சமயத்தில், எவ்வித கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது. சதுரடி கணக்கில் குடிநீர் கட்டணம், 'டிபாசிட்' நிர்ணயித்திருப்பது அராஜகம். 'மினி எமர்ஜென்சி' போல், மாநகராட்சி செயல்படுகிறது. கட்டண உயர்வு மக்களை கசக்கிப் பிழியும் செயல்.

ராமமூர்த்திமாவட்ட செயலாளர், மா.கம்யூ.,'சம்பாதிக்கும் இடமாகிறது'மக்களுக்கு சேவை செய்யும் உணர்வுடன் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட வேண்டும். அதற்காக பிறப்பு, இறப்பு சான்றுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதில்லை; அதற்கு நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். சமீபகாலமாக பணம் சம்பாதிக்கும் இடமாக, உள்ளாட்சி அமைப்புகள் மாறி வருகின்றன.கல்யாண சுந்தரம்முன்னாள் தலைவர், மாநகராட்சி கல்விக்குழு.

 


Page 4 of 3988