வட்டி மானியத்தில் வீடு கட்ட |.1.40 கோடி கடன் ஆணை வழங்கல்

Monday, 09 August 2010 11:01 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி 09.08.2010

வட்டி மானியத்தில் வீடு கட்ட ரூ 1.40 கோடி கடன் ஆணை வழங்கல்

 போடி, ஆக. 8: போடி நகராட்சியில் வட்டி மானியத்தில் வீடு கட்டுவதற்கு 108 பேருக்கு ரூ1 கோடி 40 லட்சம் கடனுக்கான தாற்காலிகக் கடன் வழங்கல் ஆணைகள் வழங்கப்பட்டன.

போடி நகராட்சியில் குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக, நகர்ப்புற ஏழைகளுக்கு, வட்டி மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட 300-க்கும் மேற்பட்டார் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக 108 பேருக்கு தாற்காலிக கடன் வழங்கல் ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நகர்மன்றக் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 108 பேருக்கு ஆணைகளை வழங்கி அவர் பேசியது:

தமிழக அரசின் சார்பில், கிராமப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் நகர்ப்புற ஏழைகளுக்கான இத்திட்டம், பொதுமக்களுக்கான சிறந்த திட்டம்.

இத்திட்டத்தில் வட்டியும் குறைவு, தவணைத் தொகை செலுத்தும் காலம் அதிகம் என்பதால் தவணைத் தொகை மிகக் குறைவு. இதனால் எளிதில் கடனைச் செலுத்த முடியும். தற்போது 300 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். இவர்களில் 108 பேருக்கு ரூ1 கோடி 40 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள் முன் வந்துள்ளன. இவர்கள் சரியாக கடன் செலுத்தினால் 600 முதல் 1000 பேர் வரை கடன் பெற முடியும்.

இத்திட்டம் சரியாகப் பயன்தர வங்கி மேலாளர்கள் உதவ வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் இக்கடன் திட்டத்திற்காக வருமானச் சான்று, வழக்கறிஞர் கருத்துரை போன்றவை, மனை வரைபடம் எளிதில் கிடைக்க நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு ஆணையர் க.சரவணக்குமார் முன்னிலை வகித்தார். மதுரை யூனிட் குடிசைப் பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் ஆர்.ஜெயபால் திட்டம் பற்றி விளக்கினார். தேனி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு கடன் செலுத்தும் முறை பற்றி விளக்கினார்.

நகர்மன்றத் துணைத் தலைவர் ம.சங்கர், இந்தியன் வங்கி மேலாளர் அகிலன், ஸ்டேட் வங்கி மேலாளர் ராஜரத்தினம், கனரா வங்கி மேலாளர் சந்திரகாந்தன், சென்ட்ரல் வங்கி தமிழ்செல்வன், குடிசைப் பகுதி மாற்று வாரிய உதவிப் பொறியாளர் எஸ்.பிரதாபன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

குடிசைப் பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் என்.பாண்டியராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், நகர தி.மு.. செயலர் ராஜா ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 10 August 2010 04:37