மதுரை சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு

Wednesday, 27 October 2010 09:41 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன்              27.10.2010

மதுரை சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு

மதுரை, அக். 27: சென்னையை போல் மதுரையிலும் சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

முக்கிய நகரங்களில் சாலையோர வியாபாரிகள் வெயில், மழையில் சிக்கி அவதிப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் அமைவதால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இதன் அடிப்படையில் சென்னை, கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தனி இடம் ஒதுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மதுரையில் நேதாஜி சாலை, காமராஜர் சாலை, வெளிவீதி, மாசி வீதி, மாரட் வீதி உள்பட பல்வேறு முக்கிய வீதிகளில் சாலையோர வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர். இவர்களின் பிரநிதிகளுடன் மதுரை காங்கிரஸ் எம்.எல்.. ராஜேந்திரன் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் செபாஸ்டினை சந்தித்து கோரினார்.

இதுகுறித்து ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், ‘‘வெளிநாட்டு பொருள் விற்கும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி தனி இடம் ஒதுக்கி இருப்பது போல், சாலையோர வியாபாரிகளும் தனி இடம் ஒதுக்குபடி கோரினோம். வைகை ஆற்றில் யானைக்கல் மேம்பாலத்தின் கீழ் பகுதி (கல்பாலம்) புதிதாக கட்டியுள்ள செல்லூர் மேம்பாலத்தின் கீழ் பகுதி, ரேஸ்கோர்ஸ் விளையாட்டு திடலின் வெளி பகுதி உள்பட 10 இடங்களை குறிப்பிட்டு கோரி உள்ளோம். எந்த இடத்தை ஒதுக்குவது என்பது குறித்து நவம்பர் 2ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்" என்றார்.