மாநகராட்சி ஆணை வெளியீடு 3 லட்சம் அரவாணிகளுக்கு மாதம் ரூ1,000உதவித்தொகை

Thursday, 11 November 2010 06:01 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினகரன்                    11.11.2010

மாநகராட்சி ஆணை வெளியீடு 3 லட்சம் அரவாணிகளுக்கு மாதம் ரூ1,000உதவித்தொகை

புதுடெல்லி, நவ. 11: டெல்லியில் உள்ள 3 லட்சம் அரவாணிகளுக்கு மாநகராட்சி சார்பில் மாதம் ரூ1,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநகராட்சி சார்பில் மூத்த குடிமக்கள், விதவைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட் டோருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் அரவாணிகளுக்கும் மாதந்தோறும்

ரூ1,000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரவாணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் உள்ளாட்சி அமைப்பு என்ற பெருமையை டெல்லி பெறுகிறது.

அரவாணிகளுக்கு மாத உதவித்தொகை அளிப்பது மற்றும் அவர்களை வீட்டு வரி வசூலிப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முன்மாதிரி திட்டத்தை பட்ஜெட் கூட்டத்தின்போது, மாநகராட்சியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுக் குழு தலைவர் மாலதி வர்மா முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவாணிகளுக்கு வயதாகிவிட்டால், அவர்களால் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. நல்ல சாப்பாடு, ஊட்டச்சத்து இன்றி அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர். இப்படி பரிதாபமான நிலையில் உள்ள அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் அரவாணிகள் பயன் பெறுவார்கள்.

உதவித் தொகை பெற விரும்பும் அரவாணிகள், ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து தாங்கள் அரவாணிகள்தான் என்பதற்கான மருத்துவ சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் தாங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் உறுதி அளித்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வேண்டும். அதை பரிசீலித்து அவர்களுக்கு மாத உதவித்தொகை அளிக்கப்படும்.

மாத உதவித்தொகை திட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மாத உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.