சாலையோர நடைபாதையில் தூங்குவோர் 1,774 பேர்; பெண்கள் 689 பேர்; குழந்தைகள் 409 பேர்

Wednesday, 17 September 2014 07:49 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர்     17.09.2014

சாலையோர நடைபாதையில் தூங்குவோர் 1,774 பேர்; பெண்கள் 689 பேர்; குழந்தைகள் 409 பேர்

சென்னை : சாலையோரம் படுத்து உறங்குவோர் குறித்து, மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரங்களில், ஒரு லட்சம் பேருக்கு, ஒரு இரவு காப்பகம் வீதம் அமைக்கப்பட வேண்டும்.

கணக்கெடுப்பு : அதன்படி சென்னையில், 70 இரவு காப்பகங்கள் செயல்பட வேண்டும். தற்போது 28 காப்பகங்கள் உள்ளன. மீதி காப்பகங்களை திறக்க, தகுதியான தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், வீடற்றோர் குறித்து, மாநகராட்சி, புதிய கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன், ஒரேநாள் இரவில், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஒட்டுமொத்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், இரண்டு மண்டலங்களில், 1,774 பேர் சாலையோர நடைபாதையில், படுத்து உறங்குவது தெரியவந்தது. அவர்களில் 689 பெண்களும், 676 ஆண்களும், 409 குழந்தைகளும் அடக்கம். ஆண்கள், குழந்தைகளை விட பெண்கள், அதிகளவில் நடைபாதையில் உறங்குவது, மாநகராட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழிப்புணர்வு இல்லை : இதில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும், 1,656 பேர் சாலையோரம் வசிக்கின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில், 118 பேர் வசிக்கின்றனர்.அவர்களுக்கு, மாநகராட்சி நடத்தும், இரவு காப்பகம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை என்பதும், கணக்கெடுப்பில் தெரியவந்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன் முழு அளவில் அனைத்து மண்டலங்களிலும் கணக்கெடுப்பு பணியை முடித்துவிட்டு, அவர்களை இரவு காப்பகங்களில், பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

90 சதவீதம் பேர் யார்?
இதற்கிடையே சாலையோரம் உறங்கும் ஆண்களில், 90 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.மது அருந்துவோருக்கு, இரவு காப்பகத்தில் தங்க அனுமதி கிடையாது என்பதால், இவர்களுக்கு மாநகராட்சியின் மது குடிப்போருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.