காரையாரில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற முதல் கிராமசபைக் கூட்டம்

Wednesday, 27 January 2010 08:38 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி 27.01.2010

காரையாரில் மலைவாழ் மக்கள் பங்கேற்ற முதல் கிராமசபைக் கூட்டம்

அம்பாசமுத்திரம், ஜன. 26: காரையார் காணிக்குடியிருப்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் பங்கேற்ற முதல் கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட 9- வது வார்டில் காரையார் காணிக்குடியிருப்பு, இஞ்சிக்குழி, மயிலாறு, தருவட்டான்பாறை, சேர்வலாறு, அகஸ்தியர் காணிக்குடியிருப்பு ஆகியன உள்ளன. இப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் தங்கள் பகுதியை தனி ஊராட்சியாக உருவாக்கி அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் வன உரிமை சட்டத்தின் கீழ் அண்மையில் நகராட்சி 9- வது வார்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை கொண்டு வன உரிமைக்குழு அமைக்கப்பட்டது. இக் குழுவின் முதல் கிராம சபைக் கூட்டம் நகர்மன்றத் தலைவரும் அக்குழு தலைவருமான எஸ்.பி. மாரியப்பன் தலைமையில் காணிக்குடியிருப்பில் நடைபெற்றது.

இதில், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் எஸ். சிவசங்கரன், நகராட்சி நிர்வாக அதிகாரி இ. முருகன், கிராம நிர்வாக அலுவலர் மது, வன உரிமைக்குழு நிர்வாகிகள் கணேசமூர்த்தி, ஜெயவாணி, ஆறுமுகம், வனவர் செல்வராஜ் மற்றும் மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் மலைவாழ் மக்களுக்கு தனி நபர் பட்டா வழங்க வேண்டும், பாரம்பரிய உரிமைகள் மற்றும் முன்னோர்கள் எடுத்து விற்பனை செய்து வந்தபடி விளை பொருட்களை மகசூல் செய்ய அனுமதிக்க வேண்டும்,

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மின் இணைப்பு வழங்க வேண்டும், வனங்களில் கால்நடைகளை மேய்க்கவும், புல் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Wednesday, 27 January 2010 08:39