தொகுப்பு வீடுகளுக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு

Tuesday, 09 February 2010 07:17 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி 9.02.2010

தொகுப்பு வீடுகளுக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு

வேலூர், பிப். 8: வேலூர் மாவட்டத்தில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டித்தர ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ந.அருள்ஜோதி அரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

மத்திய, மாநில அரசுகள் சார்பில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.2008}2009ம் நிதியாண்டில் இத்திட்டம் கீழ் வேலூர் மாவட்டத்தில் 4,967 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது 2009}2010ம் நிதியாண்டில் 9,424 வீடுகள் கட்டவும், 2,422 கூரை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றவும் ரூ.52.93 கோடி நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்துள்ளன.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 60 சதவிதம், இதர பிரிவினருக்கு 40 சதவிதம் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இதில் 15 சதவிதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் வேலூர் அரசுப் பொருள்காட்சியில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சி முகமை அரங்கில் பெறலாம். பிப்ரவரி 10}ம் தேதிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளதற்கான சான்று, சொந்த இடத்திற்கான பட்டா நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் தேர்வுக்குப் பிறகு, 265 சதுர அடியில், மாநில அரசு பங்களிப்புத் தொகை ரூ.29 ஆயிரம், மத்திய அரசு பங்களிப்புத் தொகை ரூ.26 ஆயிரம் என ரூ.55 ஆயிரம் மதிப்பிலான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:18