மானிய வட்டியில் வீட்டு கடனுதவி பெற அழைப்பு

Saturday, 20 February 2010 06:40 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர் 20.02.2010

மானிய வட்டியில் வீட்டு கடனுதவி பெற அழைப்பு

பெரம்பலூர் :பெரம்பலூர் மாவட்டத்தில் மானிய வட்டியில் வீட்டு கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட கலெக்டர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நகர்ப்புற ஏழை மக்களுக்கு மானிய வட்டியில் வீட்டு கடன் உதவித்திட்டத்தில் வீடு கட்டுவதற்கும், வீடு வாங்கவும் கடனுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன் பெற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மாத வருமானம் ரூ 3,300 வரை பெறும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும், மாத வருமானம் ரூ 3,301 முதல் ரூ. 7,300 வரை பெறும் குறைந்த வருமான பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. ஒரு லட்சமும் , குறைந்த வருமான பிரிவினருக்கு ரூ 1.60லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகை 15முதல் 20 ஆண்டு கால இடைவெளியில் திரும்ப செலுத்தப்படவேண்டும். மேற்காணும் கடன் தொகை தேசிய வங்கிகளின் மூலம் பெற்றுத்தரப்படும். கடன் தொகைக்கு வட்டியில் 5 சதவீதம் மானியமாக வழங்கப்படும். கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கவேண்டும். குறைந்த வருமான பிரிவினர்களுக்காக கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் 40 சதுர மீட்டர் பரப்பளவு இருக்கவேண்டும்.தம்முடைய பெயரிலோ அல்லது தனது மனைவி பெயரிலோ சொந்தமாக வீடு இல்லாதவர்கள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். சொந்தமாக நிலம்வைத்திருப்பவர்கள் அதற்குரிய பட்டா உரிமையை பெற்றிருக்கவேண்டும். அரசின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றுள்ளவர்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விபரம் அறிய திருச்சி காஜாமலை காலனியில் உள்ள வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Saturday, 20 February 2010 06:42