108 குழந்தைகள் மையங்களுக்கு ரூ. 2.67 கோடியில் சொந்த கட்டடங்கள்

Saturday, 20 February 2010 10:49 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி 20.02.2010

108 குழந்தைகள் மையங்களுக்கு ரூ. 2.67 கோடியில் சொந்த கட்டடங்கள்

தூத்துக்குடி, பிப். 19: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 108 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்காவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.5 லட்சம் செலவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.. ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளரச்செய்யும் வகையில் குழந்தைகள் வளர்ச்சி மையங்களை நவீனப்படுத்துவதோடு, அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் அவை இயங்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 904 மையங்கள் சொந்த கட்டடங்களிலும், 605 மையங்கள் வாடகை கட்டங்களிலும் இயங்கி வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 108 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், கிராம உள்கட்டமைப்புத் திட்டம், சுனாமி மறுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் 108 மையங்களுக்கும் ரூ. 2.67 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

64 குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையங்கள் ரூ. 36,79,500 செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 153 குழந்தைகள் வளர்ச்சித் திட்ட புதிய மையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.

முன்னதாக, தூத்துக்குடி மாநகராட்சி லெவிஞ்சிபுரம் 2-வது தெருவில் ரூ. 2.70 லட்சம் செலவில் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 12 பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகளையும் அவர் வழங்கினார்.

அத்துடன் முத்துக்கிருஷ்ணாபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இரா. கஸ்தூரி தங்கம், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன், நகர்நல அலுவலர் திருமால்சாமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துலெட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் முத்துநாயகம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் த. ஹரிராம், கூட்டுறவுச் சங்க தனி அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

Last Updated on Saturday, 20 February 2010 10:50