பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

Sunday, 10 July 2016 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தினமணி    10.07.2016

பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடலில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை: ‘தேரி’ அமைப்பு பரிந்துரை

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமிடல்களில் தேசிய ஒருங்கிணைப்பு தேவை என்று ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (தி எனர்ஜி அண்ட் ரிசோர்ஸஸ் - தேரி) பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் அஜய் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக கிராமப்புற, நகர்ப்புறங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இரண்டு ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைப் போக்க ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை தொடர்பாக ஆராயப்பட்டன.

நகர்ப்புறங்களின் மேம்பாட்டை பொருத்தே நம் நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தைத் தடுக்க நகர்ப்புற திட்டமிடல்களில் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு தேவை. மேலும், நகர்ப்புற திட்டமிடல்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், பழைய கட்டடங்களை மறுநிர்மாணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம் என்று அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

தேரி அமைப்பின் பரிந்துரை பற்றி மத்திய வனம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறைக்கான இணைச் செயலர் ஆர்.ஆர்.ராஸ்மி கூறுகையில், "பருவநிலை மாற்றம் காரணமாக நகர்ப்புறங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக "தேரி' அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களின் கட்டமைப்பு பணி மேற்கொள்வது மிகவும் சிக்கலானவை. எனவே, அதற்கேற்ப நகர்ப்புற திட்டமிடல்களில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்' என்றார்.

Last Updated on Tuesday, 12 July 2016 11:05