மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

Friday, 03 March 2017 10:04 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தி  இந்து      02.03.2017      

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்: பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சின்னம் தேர்வு செய்ய அழைப்பு

மதுரை மாநகரம் மிடுக்கான நகரத் திட்டத்துக்கான (ஸ்மார்ட் சிட்டி) முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டியை அடையாளப்படுத்தும் வகையில் மதுரையின் பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சின்னத்தை தேர்வு செய்ய பொதுமக்கள், மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 500 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்நகரங்களில், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தில் மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் இந்த திட்டத்தை தொடங்குவதற்காக ஸ்மார் சிட்டி லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக மாநகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

மிடுக்கான நகர திட்டத்துக்கு (ஸ்மார்ட்சிட்டி) மதுரையை அடை யாளப்படுத்தும் வகையிலான சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது. இப் பொறுப்பை மாணவர்கள், பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கல்லூரி மாணவ, மாணவிகள், வடி வமைப்பாளர்கள், தனியார் நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இதில் தன்னார்வமாக இணைந்து மதுரை மாநகரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மிடுக்கான நகரம் குறித்த சிறந்த சின்னம் (LOGO) மற்றும் இலக்கு உரையை (TAGLINE) தயார் செய்து வரும் 17-ம் தேதிக்குள் ஆணையர்/தனி அலுவலர், அறிஞர் அண்ணா மாளிகை, மதுரை மாநகராட்சி, என்ற முகவரிக்கும், maducorp@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

பொதுமக்கள் அனுப்பி வைக்கும் சின்னங்களில் எது சிறந்தவை என்பது தொடர்பாக, மீண்டும் பொதுமக்களிடம் வாக் கெடுப்பு நடத்தப்படும். அதில் முதலிடம் பெறும் சின்னம் மற்றும் இலக்கு உரைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.