சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

Tuesday, 13 June 2017 10:35 administrator நாளிதழ்௧ள் - ந௧ரம் மற்றும் மாந௧ரம்
Print

தி இந்து        11.06.2017

சென்னையின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி: அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு

மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.
மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் எடுக்கும் பணிகளைப் பார்வையிடும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர்.

சென்னையின் குடிநீர் பிரச் சினையை போக்குவதற்காக கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, புழல் ஏரிகள், வறட்சி காரணமாக வறண்டுள்ளன. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைப் போக்க கல் குவாரிகளில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், குவாரி தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து மாங்காடு அருகேயுள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நேற்று இந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அமைச்சர் தகவல்

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

145 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 63 சதவீதம் மழை குறைந்துள்ளது. சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க சிக்கராயபுரம் கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்து 7ஆயிரம் நடைகள் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கல் குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு ரூ.13.63 கோடி செலவானது. மேலும் 20 நாட்களில் இந்த பணி முடிவடைந்தது. இந்த திட்டத்துக்கு ராட்சத மோட்டார் பம்பு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது சரித்திர சாதனை திட்டம்.

தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்து வருகிறது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் திமுகவினரும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை செய்கின்றனர். அவர்கள் ஏரியில் உள்ள செடி கொடிகளை மட்டுமே அகற்றுகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நீர்நிலைகளை தூர்வாரவில்லை. பத்திரிகையில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே தூர்வாரும் பணியை செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. பழனி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் அருண்ராய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.