ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

Monday, 06 January 2014 09:01 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி               06.01.2014

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

கரூர் மாவட்த்தில் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கரூர் நகராட்சியை ரூ. 40 கோடியில் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்ட பணியாக கரூர் பசுபதீஸ்வரர் கோயில் முன்பு ரூ. 36 லட்சம் மதிப்பில் சிமென்ட் வண்ணக்கல் தரை தளம் அமைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமி பூஜை தொடக்க விழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

கரூர் மாவட்டத்துக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் எண்ணற்ற நலத் திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். ரூ. 68 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பசுபதிபாளையத்தில் ரூ. 13.75 கோடி செலவில் உயர்மட்டப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பசுபதிபாளையம், பெரியகுளத்துப்பாளையத்தில் ரூ. 6.60 கோடியில் குகை வழிப்பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

சுக்காலியூர் முதல் காந்திகிராமம் வரை ரூ. 16.35 லட்சத்தில் 4 வழிச்சாலை பணிக்கு பூமிபூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல காந்திகிராமம் முதல் வீரராக்கியம் வரை பழுதான சாலையை ரூ. 6.75 கோடியில் சீரமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் முடிந்து விடும். இதேபோல எண்ணற்ற திட்டங்கள் கரூர் மாவட்டத்துக்கு கிடைக்க, தமிழக முதல்வருக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் வரதராஜன் வரவேற்றார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, கோட்டாட்சியர் நெல்லை வேந்தன், குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் பாப்பாசுந்தரம், கரூர் ஒன்றியக்குழுத் தலைவர் திருவிகா, கரூர் நகர்மன்றத் துணைத் தலைவர் காளியப்பன், அட்லஸ் நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.