நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

Friday, 31 January 2014 11:26 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமலர்                30.01.2014

நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தில் குடிநீர் குழாய் மாற்ற ரூ.17.20 கோடி ஒதுக்கீடு

குமாரபாளையம்: நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய்கள் புதிதாக மாற்றி அமைக்க, குமாரபாளையம் நகராட்சிக்கு, 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. 7.5 கி.மீ., பரப்பளவு கொண்ட இந்நகராட்சியில், நிலத்தடியில் பதிக்கப்பட்ட குடிநீர் மெயின் குழாய்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதால், தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இக்குழாய்கள், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவற்றை சரி செய்யும் வகையில், நகராட்சி பகுதியில் பதிக்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும், அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றில் உள்ள நீரேற்று குழாய்கள் மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழக அரசு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

நகராட்சி கமிஷனர் சங்கரன் கூறியதாவது:

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடியில் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் உறுதித்தன்மை இழந்ததால், அதிக அளவில் பழுது ஏற்பட்டு குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்யும் வகையில், திட்டம் தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டது. அதன் அடிப்படையில், நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 17.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான பணி விரைவில் துவங்கப்படும். இப்பணி முழுமை அடையும்போது, நகராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி, குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.