திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

Monday, 03 February 2014 11:02 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி             03.02.2014

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ. 250 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 250 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

திருப்பூர் மாநகராட்சியின் 2, 3-ஆவது மண்டலங்களுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, திருநீலகண்டபுரத்தில் நடைபெற்றது.

இதற்கு, மேயர் அ.விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், குப்பை அகற்றும் பணியைத் துவக்கிவைத்து வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியது:

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அதிமுக ஆட்சியில் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடந்த 2.5 ஆண்டுகளில் திருப்பூர் மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக முதல்வர் ரூ. 250 கோடி வழங்கி உள்ளனர். அதன்மூலமாக மக்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, வாகனங்கள் பற்றாக்குறை குறித்து

தமிழக முதல்வரின் கவனத்துக் கொண்டுசென்றேன். அதன் அடிப்படையில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அகற்றும் பணிக்கு முதல்வர் அனுமதி அளித்தார்.

தனியார் நிறுவனம் மூலமாக, குப்பை அகற்றும் பணிகளுக்கு 781 பணியாளர்கள், 28 ஓட்டுநர்கள், 800 குப்பை கொட்டும் கன்டெய்னர் தொட்டிகள் உள்ளிட்ட வசதிகளுடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

நகரை தூய்மையாக வைப்பதற்கு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேயர் அ.விசாலாட்சி பேசியது:

திருப்பூரில் 2, 3-ஆம் மண்டலப் பகுதிகளுக்கு உள்பட்ட 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 வீடுதோறும் குப்பை சேகரித்தல், வீதிகளில் கன்டெய்னர் தொட்டிகளில் இருந்து குப்பை அகற்றும் பணிகள் உள்பட தனியார் நிறுவம் மேற்கொள்ளும் இந்தப் பணிகள் அனைத்தும் நவீனத் தொழில்நுட்பம் மூலமாக அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றார்.

இதில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், சுகாதாரக் குழு தலைவர்

பூலுவப்பட்டி பாலு, நகர்நல அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.