தினமணி 08.09.2014 டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம் தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்க

Monday, 08 September 2014 07:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print
தினமணி        08.09.2014

டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம்

தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் மோகன் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ. 50 கோடியை அளிக்க மத்திய சுற்றுலாத் துறை கடந்த பிப்ரவரி ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத் திட்டத்துக்கு தேவையான நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநகராட்சியின் சார்பாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய இத் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாராகவில்லை.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரை இந்த மாத இறுதிக்குள் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு, டவுன் ஹால் புனரமைப்புப் திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு, 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

டவுன் ஹால் கட்டடத்தில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1866-ஆம் ஆண்டில் இக் கட்டடத்தை தில்லி மாநகராட்சி வாங்கியது. டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தில் கூட்ட அரங்கு புதுப்பிக்கப்படும். தில்லி வரலாறும் பாரம்பரியமும் என்ற பெயரில் அங்கு அருங்காட்சியகம் நிறுவப்படும்.

டவுன் ஹால் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் கட்டடக் கலை குறித்த தகவல்களையும் ஒலி-ஒளி வடிவில் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

பிரதான கட்டடத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டடம் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்படும். சாந்தினி செக் பகுதியில் 1860-ஆண்டு கால கட்டட வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் "ஹெரிடேஜ் ஹோட்டல்' உருவாக்கப்படும்.

டவுன் ஹால் வளாகத்தில் ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலை பகுதியில் பூமிக்கடியில் வாகன நிறுத்த மையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தி சிலை தாற்காலிமாக அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாகன நிறுத்தும் மையம் உருவாக்கப்பட்டவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும். இதே போல, டவுன் ஹால் வளாகத்தில் கைவினைப் பொருள்கள் பஜார், ஓவியக் கூடம், திறந்த வெளி அரங்கம், கண்காட்சி மையங்கள், சிற்ப பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

லாரன்ஸ் இன்ஸ்டிடியூட் என்று அறியப்பட்ட டவுன் ஹால் தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகமாக இருந்தது. தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வடக்கு தில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி ஆகிய இரண்டும் மின்டோ சாலையில் புதிதாக கட்டப்பட்ட சிவிக் சென்டரில் செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, டவுன் ஹால் பயன்பாடற்றுக் கிடந்தது. இந் நிலையில், நிலுவையில் உள்ள டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.