பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

Wednesday, 21 September 2016 07:09 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி            21.09.2016 

பொலிவுறு நகரங்கள் பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர்

  மத்திய அரசின் "பொலிவுறு நகரம்' திட்டத்தின் 3-ஆவது பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 4 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

2022-ஆம் ஆண்டுக்குள் 100 பொலிவுறு நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 நகரங்கள் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டன. அதில் சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, 2-ஆவது கட்டமாக கடந்த மே மாதம் 13 நகரங்கள் அடங்கிய 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக நகரம் எதுவும் இடம் பெறவில்லை.

இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்ட நகரங்களின் 3-ஆவது பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

இதில் தமிழகத்தின் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் உள்பட 12 மாநிலங்களைச் சேர்ந்த 27 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசியும் இதில் இடம் பிடித்துள்ளது. மேற்கு வங்கம், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நகரங்கள் எதுவும் இப்பட்டியலில் இல்லை. அதே நேரத்தில் பாஜக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் தாணே, நாசிக், நாகபுரி, கல்யாண் } டோம்பிவிலி, ஒளரங்காபாத் ஆகிய 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், உஜ்ஜைன், ராஜஸ்தானின் கோட்டா, அஜ்மீர், குஜராத்தின் வதோதரா, பஞ்சாபின் அமிருதசரஸ், லூதியானா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹுப்ளி-தார்வாட், மங்களூரு, சிவமுஹா, தும்கூரு ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

சமாஜவாதி கட்சி ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் வாராணசி, ஆக்ரா, கான்பூர், பிஜு ஜனதா தளம் ஆட்சியில் உள்ள ஓடிஸாவில் தார்வாட், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, சிக்கிம் மாநிலத்தின் நாம்சி, நாகாலாந்தின் கோஹிமா ஆகிய நகரங்களும் 3-ஆவது கட்ட பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 நகரங்களும் ரூ.66,883 கோடி செலவில் பொலிவுறு நகரங்களாக மேம்படுத்தப்படவுள்ளன.

"இதுவரை 60 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.1,44,742 செலவில் இவை மேம்படுத்தப்படும். பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்படும்' என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

பொலிவுறு நகரங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், இணையதள வசதி, மின்னணு நிர்வாகம் உள்பட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும்.