பொலிவுறு நகரங்களுக்கான அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியீடு!

Tuesday, 04 April 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி     04.04.2017

பொலிவுறு நகரங்களுக்கான அடுத்த பட்டியல் ஜூன் மாதம் வெளியீடு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமான பொலிவுறு நகரங்களின் அடுத்த பட்டியல் வரும் ஜுன் மாதம் இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25-ஆம் தேதியன்று பொலிவுறு நகரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 100 பொலிவுறு நகரங்களை உருவாக்குவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதையடுத்து, கடந்த ஆண்டு 20 நகரங்களின் பெயர்களை பொலிவுறு நகரங்களுக்காக வெளியிட்டது. பின்னர் மே மாதத்தில் 13 நகரங்களின் பெயர்கள், செப்டம்பர் மாதத்தில் 27 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி, பொலிவுறு நகரங்களாக உருவாக்கப்பட இருக்கும் 60 நகரங்களின் பெயர்களை மத்திய அரசு இதுவரையிலும் அறிவித்துள்ளது. எஞ்சிய 40 பொலிவுறு நகரங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 40 பொலிவுறு நகரங்களின் பெயர் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வரும் ஜுன் மாதம் இறுதியில்  வெளியிடவுள்ளது. 40 நகரங்களின் பெயர் வெளியிடப்பட்டதும், அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ.500 கோடியை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். அந்த நிதியைக் கொண்டு, அந்த நகரங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.