'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

Friday, 07 April 2017 05:52 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி     07.04.2017

'அம்ருத்' வளர்ச்சித் திட்டம் தமிழகத்துக்கு ரூ.11,237 கோடி

'அம்ருத்' எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான அடல் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.11,237 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

நாடு முழுவதும் 'அம்ருத்' திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சுமார் 500 நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி, கடந்த 2015-இல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.50 ஆயிரம் கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டு அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நகரங்களில் நகர்ப்புறங்களின் தரத்தை உயர்த்தும் வகையில், அம்ருத் திட்டம் மூலம் மின்னாளுகை, நிதிச் சீர்திருத்தம், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த திட்டம் வரையறுக்கப்பட்டது. இதன்படி இந்த நகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் அடிப்படை வசதிகளான குடிநீர், தண்ணீர், கால்வாய் வசதிகள், கழிவு மேலாண்மை, சாலை வசதிகள் போன்றவை செய்யப்படும்.

இதையடுத்து, அம்ருத் திட்டத்தில் முதல் கட்டமாக தமிழகத்தில் 32 நகரங்களைச் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, அம்பத்தூர், திருப்பூர், ஆவடி, திருவொற்றியூர், தூத்துக்குடி, நாகர்கோவில், தஞ்சாவூர், பல்லாவரம், திண்டுக்கல், வேலூர், தாம்பரம், கடலூர், ஆலந்தூர், காஞ்சிபுரம், ஈரோடு, திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், கள்ளக்குறிச்சி, மாதவரம், புதுக்கோட்டை, ஓசூர், ஆம்பூர், காரைக்குடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த நகரங்களில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ. 11,237 கோடி நிதியை வழங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நிதி எவ்வாறு தமிழகத்துக்கு பயன்படும்? அதற்கான வழிமுறைகள் என்ன? திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவது எப்படி? போன்றவை குறித்து விரைவில் மாநிலத் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தும் என்று மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Friday, 07 April 2017 06:35