ஆகஸ்ட் 15 முதல் மெரீனா கடற்கரையில் "பிளாஸ்டிக்' பொருள்களுக்கு தடை

Tuesday, 28 July 2009 06:03 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி 28.07.2009

ஆகஸ்ட் 15 முதல் மெரீனா கடற்கரையில் "பிளாஸ்டிக்' பொருள்களுக்கு தடை



ஆகஸ்ட் 15 முதல், மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருள்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை சிறுகடை வியாபாரிகளிடம் விளக்குகிறார் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்
சென்னை, ஜூலை 27: சென்னை மெரீனா கடற்கரையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து வியாபாரிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னையை எழில்மிகு நகராக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அண்ணா சாலையில் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் பண்பாட்டை விளக்கும் வகையில் ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து மேம்பாலங்களிலும் சுரங்கப் பாதைகளிலும் சுவரொட்டிகள் ஒட்டவும், சுவர் விளம்பரங்கள் தீட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையை மேம்படுத்த ரூ. 40 கோடியில் பணிகள்: மெரீனா கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் ரூ.40 கோடியில் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு மனவளர்ச்சி பாதிப்பும், சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. மக்களின் நலத்துக்கும் பேராபத்து ஏற்படுகிறது.

எனவே, முதற்கட்டமாக பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் இல்லாத மெரீனா கடற்கரையை உருவாக்கும் வகையில், இப் பொருள்களை பயன்படுத்த மாநகராட்சி தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் கடற்கரை மணலில் புதைந்து, மழை நீர் நிலத்தின் அடியில் உட்புகாமல் தடுக்கிறது.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தி தேநீர், பாப்கான் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்க ஏற்பாடு: மெரீனா கடற்கரையில் குடிநீர் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாநகர மேயர் மா. சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 28 July 2009 06:24