எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

Wednesday, 29 January 2014 09:24 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமலர்          27.01.2014 

எல்.இ.டி., மின் விளக்குகளால் காஞ்சிபுரம் ஜொலிக்கும்: முதல்கட்ட பணிகளை துவங்கியது நகராட்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி., தொழில்நுட்பத்திற்கு மாற்றவும், கம்பங்களை ஒருசீராக்கவும், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நகராட்சி பகுதியில், பல்வேறு காலகட்டங்களில் நிறுவப்பட்ட பல்வேறு வகையான தெருவிளக்குகள் உள்ளன. அனைத்து விளக்குகளையும், மின்சாரத்தை சிக்கனமாக செலவிடும் எல்.இ.டி., தொழில்நுடப்த்திற்கு மாற்றுவதோடு, விளக்கு கம்பங்களையும் ஒரே வடிவில் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் முடிவானது.

எட்டு கோடி ஒதுக்கீடு இதை தொடர்ந்து, முதல்கட்டமாக, காமாட்சி அம்மன் கோவில் மாட வீதி மற்றும் சன்னிதி தெரு, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதி மற்றும் சன்னிதி தெரு, வரதராஜ பெருமாள் கோவில் மாடவிதி மற்றும் சன்னிதி தெரு போன்ற முக்கிய பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட உள்ளன. முதல் கட்ட பணிகளுக்காக, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டத்தில், காமராஜர் சாலை, காந்தி ரோடு, திருக்கச்சி நம்பி தெரு, நான்கு ராஜ வீதிகள், அரக்கோணம் சாலையில் ஒலிமுகமதுபேட்டை வரை, புதிய ரயில் நிலையத்திலிருந்து ஜவஹர்லால் நேரு சாலை வரை, வள்ளல் பச்சையப்பன் தெரு, போன்ற சாலைகளில் புதிய தெருவிளக்குகள் பொருத்தப்படும் என, தெரிகிறது.

இந்த திட்டம் குறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''கடந்த டிசம்பர் மாதம், முதல்வர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், இந்த திட்டத்திற்காக, 16 கோடி ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் நகர பகுதிகளில் 30 மீட்டருக்கு ஒரு மின் கம்பம் வீதம், 1,800 புதிய மின் கம்பங்கள் நட்டு, விளக்குகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்த பணி துவங்கி விடும்,'' என்றார்.