சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

Thursday, 30 January 2014 11:36 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி                30.01.2014

சூரிய குளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு

சூரிய குளத்தை தூய்மைப்படுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் க.ஆனந்தகுமாரி தெரிவித்தார்.

ஆரணி நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் க. ஆனந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் (பொறுப்பு) பா.செல்வம், துணைத்தலைவர் தேவசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரணி நகராட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணியை துவக்க ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கவுன்சிலர் வெங்கடேசன் எழுந்து, சூரியகுளம் தூர்வாரப்பட்டு உள்ளது. இக்குளத்தை சீரமைத்து அழகுபடுத்தி படகு விடும் பணிகள் எப்போது நடைபெறும் என்றார்.

நகர்மன்றத் தலைவர்: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சூரியகுளத்தை அழகுபடுத்த ரூ.33.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி நமக்கு நாமே திட்டம் மூலம் செய்யப்பட உள்ளது.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணியில் 180 கைப்பம்புகள் உள்ளன. 210 மினி டேங்க் உள்ளது. 5388 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இதற்கு ஒரு பிட்டர் மட்டுமே உள்ளார். எப்போது அதிகப்படுத்தப்படும்?

ஆணையாளர் பா.செல்வம்: புதிதாக மேலும் 2 பிட்டர்கள் வந்துள்ளனர். மொத்தம் 3 பிட்டர்கள் உள்ளனர். எங்கு குழாய் பைப் பழுதானாலும் உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கவுன்சிலர் ஜோதிலிங்கம்: ஆரணி சைதாப்பேட்டையில் பாலாஜி மனைப்பிரிவில் பூங்காவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசுப் பள்ளிக் கட்டடம் கட்ட அனுமதி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆணையாளர் பா.செல்வம்: எதற்காக அந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அதற்குத்தான் அப்பணியை செய்ய வேண்டும். மாற்றி செய்யக்கூடாது. ஆகையால் பாலாஜி நகரில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா தான் அமைக்கப்படும்.

கவுன்சிலர் வி.டி.அரசு: ஆரணி நகராட்சியின் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தகன எரிவாயு மேடை செயல்படுகிறதா?

ஆணையாளர் செல்வம்: தகன எரிவாயு மேடை அமைத்த கம்பெனியினருக்கு ரூ.15 லட்சம் பணம் தராமல் உள்ளோம். அவர்கள் சடலத்தை எரிய வைத்து பார்த்தும் சரியான முறையில் சடலம் எரியவில்லை. கம்பெனியினர் சரி செய்த பின்னர் தான் தொடர்ந்து செயல்படுத்தப்பட முடியும். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.