மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

Thursday, 30 January 2014 11:43 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தினமணி                30.01.2014

மாநகராட்சிப் பள்ளிகளில் சோலார் அமைப்பு நிறுவத் திட்டம்

திருச்சி மாநகரிலுள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சோலார் மின் அமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றத்தின் கல்விக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வியாழக்கிழமை நடைபெறவுள்ள மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

 தீர்மானப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவை விவரம்:

 அனைத்து மாநகராட்சிப் பள்ளிகளிலும் உள்ள கழிப்பறைகளை சுத்தப்படுத்தி அவற்றைப் பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும், பள்ளி வளாகத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியார் நிறுவனம் மூலம் காவலர்களை நியமிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 மாநகராட்சிப் பள்ளிகளின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவவும், பள்ளிகளுக்கு தேவையான தளவாடப் பொருள்கள் மற்றும் நவீன கரும்பலகைகளை வாங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் (61 முதல் 65 வார்டுகள்) பள்ளிகளுக்கு மேயர், ஆணையர், துணை மேயர் மற்றும் கல்விக் குழு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அவற்றுக்கான அடிப்படைவசதிகள் செய்துத் தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 பள்ளிகளில் போதுமான அளவுக்கு விளையாட்டு உபகரணங்கள், தீயணைப்புக் கருவிகள் வாங்கவும் முடிவு செய்யப்படுகிறது. பள்ளி வளாகங்களில் உள்ள இடவசதிக்கேற்ப பசுமைத் தளம் அமைக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

 இந்தப் பணிகளை மாநகரில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் பல்வேறு வரிகளில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் கல்விநிதியில் இருந்து மேற்கொள்ளவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.