கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பசுமை திட்டம்! துர்நாற்றம் கட்டுப்படுத்த மரங்கள்

Friday, 28 November 2014 09:39 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print
தினமலர்        28.11.2014

 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பசுமை திட்டம்! துர்நாற்றம் கட்டுப்படுத்த மரங்கள்

கோவை : கோவை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு ஏக்கரில், மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதை போன்று, ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும், துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியிலுள்ள பூங்கா இடங்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. மொத்தமுள்ள பூங்கா இடங்களுக்கு ஏற்ப, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், குடியிருப்போர் நலச்சங்கம் மூலமும் மரம் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதேபோன்று, கோவை மாநகரத்திலுள்ள அனைத்து முக்கிய ரோடுகளின் ஓரத்திலும் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள், தொழிற்சாலைகளில், திறந்தவெளி ஒதுக்கீட்டு இடங்களில் மரம் வளர்க்க வேண்டும். பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டட அனுமதி வழங்கும் போதே, மரக்கன்றுகளை நட்டிருக்க வேண்டும். கட்டாயம் மூன்று ஆண்டுகளுக்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என, மாமன்றத்தில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.

மாநகரத்தில் மரம் வளர்க்கும் திட்டம் கண்காணிக்கவும், ரோட்டோரத்திலும், பூங்கா இடத்தில் மரம் வளர்ப்பதையும் கண்காணிக்க, உதவி பொறியாளர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு இடத்தில், இரண்டு ஏக்கர் பரப்பில், மேட்டுப்பாளையத்திலுள்ள வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், ஆராய்ச்சி முறையில் மரம் வளர்க்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அங்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் வேகமாக வளரும், மலை வேம்பு, கடம்பு, மூங்கில், நீர் மருது, அக்ரோ கார்பஸ் உள்ளிட்ட, 15 வகை மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துர்நாற்றம் வெளிப்படுவது தவிர்க்கப்படுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதேபோன்று, வெள்ளலுார் குப்பைக் கிடங்கிலும் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மரம் வளர்க்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 14 ஏக்கர் பரப்பில் உள்ளது. அங்கு, கழிவுநீர் செல்லும் பாதை, சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பகுதிகள் தவிர மீதமுள்ள காலி இடத்தில், துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் மரங்கள் (அரோமேட்டிக் ட்ரீ) வளர்க்கும் திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநகராட்சி மேயர் ராஜ்குமார், கமிஷனர் விஜய கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

மேயர் ராஜ்குமார் கூறுகையில், ''உக்கடம் கழிநீர் சுத்திகரிப்பு நிலையம், வெள்ளலுார் குப்பைக் கிடங்கில், பல ஆயிரக்கணக்கான மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 450 மரக்கன்றுகள் நட்டு, வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யூகலிப்டஸ், மூங்கில், இலுப்பை, மகிழம், செந்துாரம், வாகை, நாவல், மகாகனி மரக்கன்றுகள் 50 நடப்பட்டுள்ளன. துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் இவ்வகை மரங்களையே, மீதமுள்ள இடத்தில் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிப்புதுாரில், தினமும் 60 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மரம் வளர்க்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இதனால், கோவையின் இயற்கை சூழல் பாதுகாக்கப்படும்,'' என்றார்.