பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

Saturday, 25 March 2017 00:00 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print

தி இந்து        25.03.2017

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க சோதனை: நெல்லையில் 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் வசூல் - மாநகராட்சி ஆணையர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சியில் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 4 மாதங்களில் ரூ.1.88 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி புதன்கிழமை தோறும் மக்காத மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9 டன்னாக குறைந்தது

தொடக்கத்தில் புதன்கிழமை தோறும் 13 டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் பெறப்பட்டன. தற்போது இது 9 டன்னாக குறைந்துள்ளது. மக்களிடையே பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் பயன்பாடு குறைந்திருப்பதையே இது காட்டுகிறது.

மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு தொடர்பாக, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் இதுவரை தச்சநல்லூர் மண்டலத்தில் ரூ.52,700, பாளையங்கோட்டை மண்டலத்தில் 50,500, மேலப்பாளையம் மண்டலத்தில் 30,900, திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.54,600 என்று மொத்தம் ரூ.1,88,700 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

பெருமளவு திடக்கழிவை உருவாக்கும் உணவகங்கள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், 5,000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட வளாகங்கள் மக்கும் குப்பையை வளாகத்தினுள்ளேயே தங்களது சொந்த பொறுப்பில் உரமாக்கவோ அல்லது எரிவாயு தயாரிக்கவோ வேண்டும் என்றும், ஏப்ரல் 8-ம் தேதிக்குப் பின்னர் அவர்களது வளாகத்திலிருந்து மக்கும் குப்பைகளை பெற இயலாது என்றும் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

செயல் விளக்கம்

கடந்த 10-ம் தேதி இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, உயிரி எரிவாயு உருவாக்கும் நிறுவன நிபுணர்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இயந்திர நிறுவனங்களின் நிபுணர்களால் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்கள், அம்மா உணவகங்களில் இவர்கள் தல ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை எடுத்து சென்று பரிசோதித்து வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 27 March 2017 10:55