சுற்றுச் சூழல் அமைச்சக ஒப்புதல் கால அவகாசம் குறைக்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் கூறினார்

Tuesday, 21 July 2009 08:05 administrator நாளிதழ்௧ள் - சுற்றுப்புறச் சூழல்
Print
தினமணி 21.07.2009

சுற்றுச் சூழல் அமைச்சக ஒப்புதல் கால அவகாசம் குறைப்பு: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

புது தில்லி, ஜூலை 20: சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருக்கும் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்கு விண்ணப்பித்து அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்து ஒப்புதல் கிடைக்க 210 நாள்களாகிறது. இதில் மாநில வனத்துறையின் ஒப்புதலைப் பெற மட்டுமே 150 நாள்களாகிறது.

சில திட்டப் பணிகளுக்கு 210 நாள்கள் என்ற கால அவகாசம் மேலும் நீடிக்கிறது. வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ள பகுதி அருகே மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் என கருதப்படும் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான கால அவகாசம் அதிகமாகும்.

கடந்த மே மாதம் வரை சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக 700 விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன. இது தற்போது 250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையறுக்கப்பட்டுள்ள 210 நாள்களில் 60 நாள்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து ஆராயவும், 45 நாள்கள் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்டறியவும், சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 60 நாள்களும், இது தொடர்பான முடிவை அறிவிக்க 45 நாள்களும் ஆகிறது. இது தவிர மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்க 60 நாள்களை எடுத்துக் கொள்கிறது. இதை 45 நாள்களாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் மூலம் தற்போது 210 நாள்களாக உள்ள அவகாசம் இனி 195 நாள்களாகக் குறையும். பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முறை தற்போது முன்கூட்டியே திட்டமிட்டதைப் போல நடத்தப்படுகிறது. மாறாக அதை அர்த்தமுள்ளதாக நடத்த தனது அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளில் சுற்றுச் சூழல் அமைச்சகம் 23 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 15 திட்டங்கள் சுரங்கம் சார்ந்தவையாகும்.