தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

Saturday, 01 February 2014 10:45 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி             01.02.2014

தேரடியில் மீண்டும் உயர் கோபுர மின்விளக்கு

திருவள்ளூர் தேரடியில் கோயில் தேர் செல்வதற்கு இடையூறாக இருந்ததாக அகற்றப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு, மாற்று இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரின் மையத்தில் உள்ளது தேரடி பகுதி. இப்பகுதி வழியாக திருவள்ளூரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்துதான் செல்ல வேண்டும்.

மேலும் இப்பகுதியிலிருந்து செங்குன்றம் சாலை, ஆவடி சாலை, பனகல் தெரு, ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் செல்கின்றன.

இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் அங்கு ஏராளமான சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தன.

இதனிடையே மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2012-ஆம் ஆண்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் தேரடி பகுதியில் ரூ.1 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் போது அப்பகுதியில் ஸ்ரீவீரராகவர் கோயில் தேரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அப்பகுதியிலிருந்த உயர்கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டது.

இதையொட்டி அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தேரடி பகுதியை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத்தினர், சாலையோரம் இருந்த கொடிக்கம்பம், கல்வெட்டுகளை அகற்றி அந்த இடத்தில் மின்விளக்கை அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அங்கு அமைக்கப்பட்டது.

அதன் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் நகரத் தலைவர் ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் கே.அட்சய்யா, நகராட்சிப் பொறியாளர் பாபு, நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.