தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

Saturday, 01 February 2014 10:52 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி             01.02.2014

தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை

ராணிப்பேட்டையில் அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் தலைவர் சித்ரா சந்தோஷம் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள ஏ.பி.முகம்மது சுலைமான் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரமன்றத் தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜே.பி.சேகர், ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

இசட்.அப்துல்லா (திமுக):எனது வார்டில் குடிநீர் பிரச்னை தலைதூக்கி வருகிறது. கோடையில் தண்ணீர் பிரச்னை மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.

டி.ராமதாஸ் (பாமக): ராணிப்பேட்டையிலும் நகராட்சி சார்பில் மின் தகனமேடை அமைக்க வேண்டும்.

ஆர்.இ.எழில்வாணன் (திமுக): நகர பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தலைவர் சித்ரா சந்தோஷம்:  நகராட்சிக்குள்பட்ட 30 வார்டுகளிலும் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தடையின்றி குடிநீர் கிடைக்க தேவையான பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலமாகவும் குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 நகரில் மொத்தம் 24 பொதுக் கழிப்பிடங்கள் உள்ளன. இவை தவிர உலகத் தரம் வாய்ந்த சுகாதாரமான "நம்ம டாய்லெட்' என்ற நவீன கழிப்பிடங்கள் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொது இடங்களிலும், பாலாற்றிலும் கொட்டுவதைத் தடுக்க மருதம்பாக்கத்தில் உள்ள நகராட்சிக் குப்பை கிடங்குக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று அங்கு பாதுகாப்பாகத் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது என்றார்.