உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

Wednesday, 05 February 2014 11:14 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினத்தந்தி            05.02.2014

உடுமலை மத்திய பஸ் நிலைய விரிவாக்க பணிகள் கலெக்டர் ஆய்வு

உடுமலை மத்திய பஸ்நிலையத்தில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

உடுமலை மத்திய பஸ் நிலையம்

உடுமலை பழனி மெயின்ரோட்டில் நகராட்சி மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு போதிய இட வசதி இல்லாததால் மத்திய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக பஸ் நிலையத்தின் கிழக்கே வி.பி.புரத்தில் இருந்த குடிசை வீடுகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்படுத்தப்பட்டன.

வி.பி.புரம் காலியிடம் மொத்தம் 1 ஏக்கர் 79 சென்ட் உள்ளது. இந்த இடம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறைக்கு சொந்தமானது. இதில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடம் 21 சென்ட் போக மீதி உள்ள, வி.பி.புரம் கிழக்கு பழனி மெயின் ரோடு பகுதியில் 10 சென்ட் இடத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் கட்டவும், அதற்கு பின்னால் 5 சென்ட் இடத்தில் உள் வட்ட அளவர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த 36 சென்ட் இடம் போக மீதி உள்ள 1 ஏக்கர் 43 சென்ட் இடத்தை நகராட்சி மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற் கான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கான இடம், நெடுஞ்சாலைத்துறை இடம், போக்குவரத்து போலீஸ் நிலையம் மற்றும் உள்வட்ட அளவர் அலுவலகம் கட்டு வதற்கு தேர்வான இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக திருப்பூர் மாவட்ட கலெக் டர் ஜி.கோவிந்தராஜ் நேற்று உடுமலை வந்தார்.

பின்னர் அவர், பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், உடுமலை பஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு, கழிப் பறையின் மேல் இருந்த பழுதடைந்த கான்கிரீட் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிலையத் திற்குள் அதிக எண்ணிக்கையில் குப்பை தொட்டிகள் வைத்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

துப்புரவு பணிகள்

அப்போது ஆர்.டி.ஓ. குணசேகரன், தாசில்தார் ரத்தினா, நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி, சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன், கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஜி.சண்முகம், கவுன்சிலர் ஏ.ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆய்வையொட்டி, நகராட்சி நிர்வாகம் சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பணியாளர்கள் அவசர அவசரமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.