ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை

Monday, 10 February 2014 12:01 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினகரன்             10.02.2014 

ஆக்கிரமிப்பால் அடிக்கடி விபத்து; தடுக்க பேரூராட்சி நடவடிக்கை

ஓமலூர், : ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பால்  ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் நகரம் அனைத்து பகுதி மக்களும் வந்து செல்லும் இணைப்பு மற்றும் முக்கிய நகரமாகும். பஸ் ஸ்டேண்டிற்¢கு போதுமான இடவசதி இருந்தும், இந்த பஸ் ஸ்டாண்ட்  போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பஸ்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதால், பல பஸ்கள் உள்ளே வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதன்படி, தர்மபுரி, மேட்டூர் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டேண்டிற்குள் வராமலேயே சென்று விடுகின்றன.

இந்தநிலையில் பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்கள், பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடைகளை பஸ் ஸ்டேண்டிற்கு உள்ளே நீட்டித்து பஸ்கள் வரமுடியாத வகையிலும், பயணிகள் நிற்கமுடியாத நிலையிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும்,  புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தில் தள்ளுவண்டி கடைகள், காய்கறி கடைகளின் மூட்டைகள், பழக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் நிழலுக்காக ஒதுங்கி நிற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதேபோல் பயணிகள் நடக்க முடியாத அளவில் நடைபாதை கடைகள்  ஆக்கிரமித்துள்ளன. கடைகள் ஓரமாக நின்றால் கடைகாரர்களின் கடுமையான பேச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

 இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விபத்துக்கு ஆளான ஒருவர் ஒரு காலை இழந்தார். இது குறித்து வந்த பல்வேறு புகார்களை அடுத்து, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி மன்ற தலைவர் (பொ) பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் பெரியசாமி மேற்பார்வையில் பணியாளர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.