ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

Wednesday, 12 February 2014 06:29 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

மாலை மலர்              12.02.2014

ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
 
ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள கோவிலை இன்று மதியத்துக்குள் இடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை, பிப்.12 - என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உள்ள அம்மன் கோவிலை இடித்துவிட்டு, அதுதொடர்பான அறிக்கையை இன்று மதியம் தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில், ஐகோர்ட்டு நுழைவு வாயிலில், ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ‘முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் பூர்ண குணமடைய வேண்டும்’ என்பதற்காக கட்டப்பட்டது.

கடந்த 27 ஆண்டுகளாக உள்ள இந்த கோவிலை அகற்றுவதற்கு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்திரி, கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்து கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவில், ‘‘பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என்பதுதான் இந்த ஐகோர்ட்டின் நிலை. அது கோவிலாக இருந்தாலும், மசூதி அல்லது தேவலாயமாக இருந்தாலும், அதுபற்றி இந்த கோர்ட்டுக்கு கவலை இல்லை. கோவில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை கட்ட விரும்புபவர்கள் தனியார் நிலத்தில் அவற்றை கட்டிக் கொள்ளலாம். மத ரீதியான கட்டிடங்களை பொது இடத்தில் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. எனவே ஐகோர்ட்டு நுழைவு வாயிலில் உள்ள ஸ்ரீ நீதி கருமாரியம்மன் கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்கள்.

ஆனால், இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இந்த கோவிலை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்கவில்லை. இதையடுத்து சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் வி.பாரதிதாசன், இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த மாநகராட்சி கமிஷனர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், இந்த ஐகோர்ட்டு உத்தரவை இன்று மதியம் 2.15 மணிக்கு அமல்படுத்தி, அது சம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார்.

அதே நேரம், இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே, கோவில் இடிப்பது தொடர்பான இந்த ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் சென்னை போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும் என்று உத்தரவிடுகிறோம்.

கோவில் இடிப்பு உத்தரவை அமல்படுத்திவிட்டு, மதியம் 2.15 மணிக்கு அதுதொடர்பான அறிக்கையை சென்னை மாநகராட்சி கமிஷனர் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.