பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க தீர்மானம்

Tuesday, 26 August 2014 09:22 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print

தினமணி           26.08.2014

பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க தீர்மானம்

உரிய காலத்தில் ஒப்பந்தப் பணிகளை முடிக்காத மாநகராட்சி ஒப்பந்ததாரரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வெள்ளியங்காடு 125 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் கடந்த 2009-10 திட்டத்தில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டும் பணிக்கு குறைந்த ஒப்பந்தப்புள்ளி கொடுத்த கோவை நிறுவனத்துக்குப் பணி உத்தரவு வழங்கப்பட்டது. 16-5-2011-இல் பணியை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இப்பணி நவ. 2011-இல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் சுற்றுச் சுவர் மொத்த நீளம் 1020 மீட்டரில் 650 மீட்டர் நீளம் மட்டும் கட்டப்பட்டுள்ளது.

காவலர் குடியிருப்பு தரைத்தளம், முதல் தளம் கான்கிரீட் கூரை மட்டும் வேயப்பட்டுள்ளது. பிற பணிகள் முடிவடையவில்லை. இப்பணியைச் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து, அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும், பணியில் முன்னேற்றமில்லை.

கடந்த 15-12-2014-இல் இறுதி அறிவிப்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பலனில்லை. இதே நிறுவனத்தில் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினுள் பணியாளர் குடியிருப்புக் கட்டவும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் அப்பணியும் முடியவில்லை.

இதனால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒப்பந்ததாரருக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அவருடைய பெயரை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் மீதித் தொகையை நடப்பு ஆண்டு விலை நிர்ணயப் பட்டியல்படி மதிப்பீடு செய்து பணியை மேற்கொள்ளவும் கோவை மாமன்றத்தில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட அவசரக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Last Updated on Tuesday, 26 August 2014 09:46