வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Monday, 10 November 2014 07:23 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற நிர்வா௧ம்
Print
தினமணி      10.11.2014

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் நீண்ட நாட்களாக சொத்து வரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்திருந்த வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடப்பாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் உள்பட பிற வகைகளைச் சேர்த்து கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் மிகுந்த சிக்கலைச் சந்தித்து வருகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் நகராட்சிப் பொறியாளர் கணேசன் மேற்பார்வையில் அதிகாரிகள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், நீண்ட நாட்கள் சொத்து வரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்து, பலமுறை எச்சரிக்கை விடுத்தும் வரி செலுத்தாதிருந்த கோவிந்தசாமி நகர், நடூர், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வீதி, தந்தை பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வீடுகளின் குடிநீர் இணைப்புக்கள் சனிக்கிழமை துண்டிப்பு செய்யப்பட்டன. நகராட்சிப் பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் சண்முகவடிவு மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, நகராட்சிப் பொறியாளர் கணேசன் கூறியது:

மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொது மக்களிடமிருந்தும், வணிக நிறுவனங்களிடமிருந்தும் வரி நிலுவைத் தொகையாக ரூ.4.50 கோடி இருப்பதால், நகராட்சி நிதி நெருக்கடியில் உள்ளது. ஆகவே, பொது மக்கள் தங்களது வரி பாக்கிகளை உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. வரி பாக்கி குறித்து நேரடியாகவும், வாகனங்களில் சென்று ஒலிபெருக்கி மூலமாகவும் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.