சொத்துவரி கேட்புப் புத்தகம் 25-ஆம் தேதி வரை வழங்கல்

Thursday, 16 May 2013 06:51 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print
தினமணி        16.05.2013

சொத்துவரி கேட்புப் புத்தகம் 25-ஆம் தேதி வரை வழங்கல்


கோவை மாநகராட்சியின் சார்பில் புதிய சொத்துவரி கேட்புப் புத்தகம் வரும் 25-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் க.லதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

கோவை மாநகராட்சி சார்பில் 2008-ஆம் ஆண்டுக்கு முன் வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கும் காலியிடங்களுக்கும் 2008-09 சொத்துவரி சீராய்வின்போது புதிய சொத்துவரி கேட்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகத்தில் 2012-13ம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டு வரை வரி செலுத்த ஏதுவாக பக்கங்கள் இருந்தன. ÷

இதில் பக்கங்கள் தீர்ந்து விட்ட நிலையில் புதிய சொத்துவரிப் புத்தகங்கள் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. மக்களிடம் இருந்து புத்தகங்கள் பெறுவதற்கு கால நீட்டிப்புக் கோரிக்கை வந்தது.

அதையடுத்து வரும் மே 25-ஆம் தேதி வரை புதிய சொத்துவரி கேட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.

நடப்பு அரையாண்டில் நிலுவை இல்லாமல் சொத்துவரி செலுத்திய அனைவருக்கும் புதிய சொத்துவரி கேட்புப் புத்தகம் வழங்கப்படும். பழைய சொத்துவரி புத்தகம் கொண்டுவந்து புதிய சொத்துவரி புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 25-ஆம் தேதி வரை சனிக்கிழமை உள்பட அனைத்து வேலைநாள்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சி வரிவசூல் மையங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சொத்துவரி புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.