‘ஆன்லைன்’ மூலம் வரி செலுத்தும் வசதியால் ரூ.92 கோடி வசூல் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Wednesday, 15 May 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print
தினத்தந்தி             15.05.2013

‘ஆன்லைன்’ மூலம் வரி செலுத்தும் வசதியால் ரூ.92 கோடி வசூல் மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிகளை வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியால், ரூ.92 கோடி வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் லதா கூறினார்.

வரி செலுத்தும் வசதி

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணங்களை பொதுமக்கள் வங்கிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி 13 நேரடி வசூல் மையங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிட்டி யூனியன் வங்கி கிளைகளிலேயே வரி செலுத்தும் வசதி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளையில் மேயர் செ.ம.வேலுசாமி இந்த வசதியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதன்படி சிட்டி யூனியன் வங்கியின் 7 கிளைகளான பாப்பநாயக்கன்பாளையம், ஒப்பணக்கார வீதி, ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி, ராம்நகர், விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஆன்லைன் மூலம் வரி செலுத்தும்முறை இதன் மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.92 கோடி வசூல்

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் லதா கூறும்போது, வரி செலுத்துவதற்கு மக்களுக்கு வசதியாக வங்கிகளில் வரி செலுத்தும் சேவையை மாநிலத்திலேயே கோவை மாநகராட்சி முதன்முறையாக செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வங்கியில் கட்டண வசூல் மையங்களில் 94 சதவீதம் பேர் ரூ.92 கோடி வரி செலுத்தி உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் லீலாவதி உன்னி, வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமார், கவுன்சிலர் அர்ஜுனன், மற்றும் சிட்டி யூனியன் வங்கி அதிகாரிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.