தொழில் வரி செலுத்த மேலும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

Wednesday, 21 August 2013 07:16 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினகரன்            21.08.2013

தொழில் வரி செலுத்த மேலும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்

கோவை:  கோவை மாநகராட்சி ஆணையாளர் லதா வெளியிட்ட அறிக்கை : கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 100 வார்டுகள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைந்த மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வருகின்ற, தனியாருக்கு சொந்தமான தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள், வணிகவளாக கடைகள், விடுதிகள், சினிமா தியேட்டர்கள் முதலிய அனைத்து நிறுவனத்தாலும் பணி அமர்த்தப்பட்டு மாதாந்திர ஊதியமாக ரூ.3,500க்கு மேல் அதாவது 6 மாத வருமானமாக ரூ.21 ஆயிரத்திற்கு மேல் பெறப்படும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்திலிருந்து 6 மாதத்திற்கு ஒருமுறை தொழில்வரி பிடித்தம் செய்து “ ஆணையாளர், கோவை மாநகராட்சி’’ என்ற பெயரில் இத்தொகை செலுத்தப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்திற்கு ஏற்ப தொழில்வரி தொகையினை பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு தவறாது செலுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களின் சட்டப்பூர்வ கடமையாகும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களே தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உண்டான தொழில்வரி தொகையினை அபராதத்துடன் செலுத்த வேண்டும்.

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80, 81, 82, 83 மற்றும் 84 ஆகிய பகுதிகளிலுள்ள வணிக நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக கடந்த 19 மற்றும் 20 ஆகிய இருதினங்கள் நடத்தப்பட்டது. அனைத்து வணிகர்களின் கோரிக்கைளை ஏற்று இம்முகாம் மேலும் இரண்டு தினங்கள் அதாவது 21 மற்றும் 22 ஆகிய இருநாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜவீதி வாகனம் நிறுத்துமிடம் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர் வார்டு அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறும் எனவும் இதனை அனைத்து வணிக நிறுவனங்களும் முழுமையாக பயன்படுத்தி தொழில்வரி பதிவு செய்து தொழில் வரி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு லதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.