மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில் வரி 25% உயர்வு

Thursday, 05 September 2013 08:03 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி             05.09.2013

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில் வரி 25% உயர்வு

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தற்போது வசூலிக்கப்பட்டுவரும் தொகையிலிருந்து, அனைத்து தொழில் வரிகளும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் ஆகியோர் கூறியது:     மேட்டுப்பாளையம் நகராட்சியில் தொழில்கள், வணிகங்கள், வேலைவாய்ப்பு விதிகள் 99-ன் கீழ் தொழில் வரிகள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரி விகிதங்களை உயர்த்த வேண்டும் என்ற விதியின் கீழ், நகராட்சிகளில் வரி உயர்வு அமலாக்கப்படுகிறது.

அதன்படி, இம்மாதம் 1-ஆம் தேதி முதல் 25 சதவீதம் தொழில் வரி உயர்த்தலாம் என நகர்மன்றம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வர உள்ளது.

தற்போது அரையாண்டு வருமானம் ரூ. 21,000-க்குள் இருந்தால், தொழில் வரி செலுத்த தேவையில்லை. ரூ. 21,000 முதல் ரூ. 30,000 வரை இருந்தால் தொழில் வரியாக ரூ. 101, ரூ. 30,001 முதல் ரூ. 45,000 வரை இருந்தால் ரூ. 250, ரூ. 45,001 முதல் ரூ. 60,000 வரை இருந்தால் ரூ. 507, ரூ. 60,001 முதல் ரூ. 75,000 வரை இருந்தால் ரூ. 761-ம், ரூ. 75,000-க்கு மேல் இருந்தால் ரூ. 1014 தொழில் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து, மேற்கண்ட தொகையிலிருந்து இனிமேல் 25 சதவீதம் கூடுதலாக தொழில் வரி செலுத்த வேண்டும்.