மாநகராட்சிக்கு செல்ல வேண்டாம் ‘வரி விதிப்பு வாகனம்’ உங்களைத்தேடி வருகிறது மாவட்ட அளவில் புதிய திட்டம் அறிமுகம்-கமிஷனர் தகவல்

Saturday, 04 January 2014 11:09 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினத்தந்தி            04.01.2014  

மாநகராட்சிக்கு செல்ல வேண்டாம் ‘வரி விதிப்பு வாகனம்’ உங்களைத்தேடி வருகிறது மாவட்ட அளவில் புதிய திட்டம் அறிமுகம்-கமிஷனர் தகவல்

வரி விதிப்பு கேட்டு கட்டிட சொந்தக்காரர்கள் மாநகராட்சிக்கு அலையவேண்டாம் என்றும், ‘வரிவிதிப்பு வாகனம்’ சம்பந்தப்பட்டவர்களைத் தேடிச் செல்லும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றும் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பு கேட்டு...

வேலூரில் புதிதாக வீடு கட்டி குடியிருப்பவர்களும் அதுபோல கடைகள், வணிக வளாகம் கட்டியிருப்பவர்களும் தங்கள் கட்டிடங்களுக்கு வரி விதிக்க கேட்டு மாநகராட்சிக்கு அலைவதை அன்றாடம் காணலாம். வரி செலுத்திய ரசீது இருந்தால்தான் வங்கி கடன் உள்பட பல்வேறு சலுகைகளை பெற முடியும் என்கிற விதி நடைமுறையில் இருப்பதால் மாநகராட்சி ரசீதிற்கு, அவ்வளவு மரியாதை உள்ளது.

வேலூர் மாநகராட்சி சார்பில் நடைபெறும் ஒவ்வொரு கவுன்சிலர்கள் கூட்டத்திலும், புதிய வீடுகளுக்கு, கட்டிடங்களுக்கு வரிவிதிக்க கேட்டு என்னுடைய வார்டைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சிக்கு அடிக்கடி செல்கிறார்கள். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் வரி விதிப்பது இல்லை, என்று மாநகராட்சியை குற்றம் சாட்டி கவுன்சிலர்கள் பேசி வருவது தெரிந்ததே. புதிய கட்டிடங்களுக்கு எப்போதுதான் வரிவிதிக்கப்படும் என்று வேலூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரூ.8 கோடி வசூல்

பொது மக்கள், வியாபாரிகள், அலுவலர்களிடம் இருந்து பெறப்படும் சொத்து வரி. தொழில் வரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் பல்வேறு இனங்களில் இருந்துதான் மாநகராட்சி மக்கள் நலத்திட்டங்களை செய்திட முடியும். ஆனால் வரி வசூல் பணி மந்தமாகவே இருந்தது, அதாவது மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு மட்டும் வரி பாக்கியாக சுமார் ரூ.13 கோடி இருந்தது. அதைத்தொடர்ந்து எடுத்த பல்வேறு தீவிர நடவடிக்கையின் காரணமாக ரூ. 8 கோடி வசூல் ஆனது. மீதமுள்ள ரூ.5 கோடியை வசூலிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகராட்சியின் வருவாயை பெருக்க, புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்வதென்றும், அந்த வரியையும் உடனடியாக பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வரி விதிப்பு வாகனம்


அதைத்தொடர்ந்து நடமாடும், வரி விதிப்பு வாகனம் உருவாக்கப்பட்டது. அந்த வாகனத்தில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அலுவலர்களும் இருப்பார்கள். அவர்கள் மண்டலம் வாரியாக செல்வார்கள் அங்கு புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட வீடு மற்றும் நிறுவனங்களுக்கு சென்று அந்த கட்டிடத்தை அளந்து அங்கேயே வரி விதிப்பு செய்து அதற்கான நோட்டீசை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கிவிடுவார்கள். அவர்கள் விரும்பினால் அங்கேயே வரியை செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகம் சென்றும் வரியை செலுத்தலாம்.

அதன்படி வேலூர் 1-வது மண்டலத்தில் ‘வரி விதிப்பு வாகனம்’ மூலம் கடந்த வாரம் மட்டும் 40 கட்டிடங்களுக்கு வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது பரீட்சாத்தமாக அமல் படுத்தப்பட்டுள்ளது. இத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மாநகராட்சியின் இதர மண்டலங்களுக்கும் விரிவு படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

2-வது மண்டலம்

தற்போது ‘வரி விதிப்பு வாகனம்’ வேலூர் 2-வது மண்டலத்தில் முகாமிட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அந்த வாகனத்தின் மூலம், மண்டல அலுவலர் கண்ணன் தலைமையில், அலுவலர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டதில், சுமார் 20 கட்டிடங்களுக்கு வரி விதிப்பு செய்யப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.