அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

Monday, 08 September 2014 07:16 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print
தினமலர்      08.09.2014

அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

சென்னை : சென்னையில் கட்டட உரிமையாளர்களே, தங்கள் கட்டடத்தை அளந்து (சுய மதிப்பீடு), சொத்துவரி செலுத்தும் புதிய நடைமுறை, வரும், அக்.,1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், வரி மதிப்பீட்டாளரை, கட்டட உரிமையாளர்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் சேர்த்து, தற்போது 12 லட்சம் பேர், சொத்துவரி செலுத்துகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு, 3,000 பேர் வீதம், புதிய சொத்துவரி விதிப்பிற்காக மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தினால் தான், குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்இணைப்பு என, பல்வேறு அடிப்படை வசதிகளை பெற முடியும். சொத்துவரி ரசீது, முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், முறையாக வீடு கட்டி இருப்போர், சொத்துவரி விதிக்க, மாநகராட்சியை நாடுவது வழக்கம். ஆனால், இந்த கிராக்கியை அடிப்படையாக வைத்து, சொத்துவரி மதிப்பீடு செய்வதில், வீணாக தாமதிப்பதையும், கட்டட உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதையும், வரி மதிப்பீட்டாளர்கள், வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இதனால், பல கட்டடங்களுக்கு, உரிய நேரத்தில் சொத்துவரி விதிப்பு செய்ய முடியவில்லை. இதன் மூலம், கட்டட உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மாநகராட்சிக்கு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, கட்டட உரிமையாளர்களே, தங்கள் சொத்தை, சுயமதிப்பீடு செய்து வரி செலுத்தும் திட்டத்தை, மேயர், சைதை துரைசாமி அறிவித்தார்.இந்த புதிய நடைமுறையை, வரும் அக்.,1ம் தேதி முதல் அமல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்காக, மாநகராட்சியிடம் சாலை வெட்டு அனுமதிபெற கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போதே, தங்கள் கட்டடத்தை சுய மதிப்பீடு செய்து, சொத்து வரி செலுத்தலாம்.

இந்த சுய மதிப்பீடு, மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற 'லைசென்ஸ் சர்வேயரால்' செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர், சான்று அளித்திருக்க வேண்டும். இவ்வாறு, சுய மதிப்பீடு செய்து சொத்து வரி செலுத்திய பிறகு, அதற்கான ஆவணங்களை மாநகராட்சியிடம், வரி செலுத்தியோர் ஒப்படைத்தால் போதும்.அதன் பிறகே, மாநகராட்சி வரி மதிப்பீட்டாளர்கள், அந்த கட்டடத்தை ஆய்வு செய்து, மதிப்பீடு சரியாக உள்ளதா என, அறிக்கை தர முடியும். சரியாக இருந்தால், கட்டட உரிமையாளருக்கு, இறுதி ஆணை வழங்கப்படும்.சுய மதிப்பீட்டில் தவறு இருந்தால், திருத்தம் செய்து, கூடுதல் வரி விதிப்பு செய்து, அதை உரிமையாளர் செலுத்திய பின், இறுதி ஆணை வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறையின் மூலம், கட்டட உரிமையாளர்கள், வரி மதிப்பீட்டாளருக்கு லஞ்சம் கொடுப்பது தவிர்க்கப்படுவதுடன், மாநகராட்சிக்கும் உரிய நேரத்தில் வருவாய் கிடைக்கும்.இந்த புதிய நடைமுறையை வரும், அக்., 1ம் தேதி முதல் அமல்படுத்தும் வகையில், இம்மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில், அதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சுய மதிப்பீட்டின் மூலம், இணையதளம் மூலமும், மண்டல அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்கள் மூலமும், சொத்துவரி செலுத்த வசதி செய்யப்படும். இந்த நடைமுறை மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு லட்சம் பேர், மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்து வரி செலுத்துவர்,'' என்றார்.