கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

Thursday, 30 October 2014 11:58 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

 தினமணி   30.10.2014

கிழக்கு தில்லியிலும் பார்க்கிங் கட்டணம் உயர்வு: நவம்பர் 1 முதல் அமல்

தில்லி சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கிழக்கு தில்லி மாநகராட்சியும் வாகன நிறுத்த (பார்க்கிங்) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் சனிக்கிழமை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வர உள்ளது.

வடக்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய மாநகராட்சிகளும் அண்மையில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தின. இந்த நிலையில், கிழக்கு தில்லி மாநகராட்சியும் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பார்க்கிங் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிக்கையை கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நிலைக்குழுவிடம் சமர்பித்தோம். அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சாதாரண, நெரிசல் மிகுந்த நேரம் என இருவகைகளில் பார்க்கிங் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி, கார்களுக்கு சாதாரண நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு தரைதள பார்க்கிங் கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30, மூன்று மணி நேரத்துக்கு மேல் நிறுத்துபவர்களுக்கு ரூ.50, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெரிசல் நேரங்களில் தரைத் தளங்களில் கார்களுக்கு முதல் ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.30, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.50, மூன்று மணி நேரம் வரை தரைத்தளத்தில் நிறுத்த ரூ.75, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இருசக்கர வாகனங்களுக்கு தரைத்தள கட்டணம் ரூ.20, பிரீமியம் பார்க்கிங் கட்டணம் ரூ.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றார் அவர்.