தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை

Tuesday, 26 March 2013 09:41 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமணி         26.03.2013

தஞ்சை நகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: ரூ. 7.33 கோடி பற்றாக்குறை  


தஞ்சை நகராட்சியில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013 - 14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியது:

'நகராட்சி எல்லைக்கு உள்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும், எல்லா வித அத்தியாவசிய வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2013 - 14 ஆம் நிதியாண்டில் தரமான சாலை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, புதை சாக்கடை வசதி, குடிசைப் பகுதிகளில் மேம்பாட்டு வசதிகளை மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெருகி வரும் சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்காவை ரூ. 24.42 கோடி மதிப்பில் அழகுப்படுத்தப்படவுள்ளன.

நகராட்சியில் 2012, 2013 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த பகுதியில் இலவசமாகப் பிறப்பு சான்று வழங்கப்படும். இந்தப் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நகராட்சியின் வரி வசூல் திறனை மேம்படுத்திடும் வகையில் நகராட்சி வருவாய் அலுவலர், வருவாய் ஆய்வர்களுக்கு கணினி, மடிக்கணினி வழங்கப்படும்.

மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அலுவலகக் கட்டடம், நகராட்சிப் பள்ளிகளில் சூரியஒளி மின்சாதன விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சி எல்லைக்குள் மரக்கூண்டுடன் 1,000 மரக்கன்றுகள் நடப்படும்.

வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் உள்ளூர் திட்டக் குழுமம், திட்ட மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 4.11 கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ளத் திட்ட முன்மொழிவுகளைத் தயார் செய்து அனுப்பி வைக்கப்படவுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.18 கோடிக்கு பணிகள் மேற்கொள்ள திட்ட முன்மொழிவுகள் தயார் செய்து அனுப்பப்படவுள்ளது.

தஞ்சை நகரில் பெருகி வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி பாதுகாக்ப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே குடிநீரேற்றும் ஆதாரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருகிற நிதியாண்டில் நகராட்சியின் அனைத்து தலைப்புகளிலும் மொத்த நிதி வரவினம் ரூ. 136.27 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ. 143.60 கோடியாகவும் எதிர்பார்த்து வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் நிகர பற்றாக்குறை ரூ. 7.33 கோடி எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 5.36 சதம் பற்றாக்குறை.

இந்தப் பற்றாக்குறையைச் சரி செய்ய ஒருங்கிணைந்த நிதி நிர்வாகத்தின் மூலம் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தப்படவுள்ளது. மேலும், நகராட்சி வருவாய் இனங்களில் ஏற்படும் இழப்பைத் தவிர்த்து, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் சாவித்திரி கோபால்.

நிகழ் நிதியாண்டில் வரவு ரூ. 86.54 கோடியாகவும், செலவு ரூ. 99.19 கோடியாகவும், பற்றாக்குறை ரூ. 12.65 கோடியாகவும் உள்ளது.