புதிய வரி விதிப்பு ஏதும் இல்லாத பட்ஜெட் தஞ்சை நகராட்சி சேர்மன் "பெருமிதம்'

Tuesday, 26 March 2013 11:34 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமலர்         26.03.2013

புதிய வரி விதிப்பு ஏதும் இல்லாத பட்ஜெட் தஞ்சை நகராட்சி சேர்மன் "பெருமிதம்'


தஞ்சாவூர்: ""தஞ்சை நகராட்சியில், புதிய வரிவிதிப்பு ஏதும் இல்லாத மக்களுக்கு சுமையற்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக இரண்டு பூங்காக்கள் 24 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் அழகுப்படுத்தப்படும்,'' என, நகராட்சி தலைவர் சாவித்திரி தெரிவித்தார்.

தஞ்சை நகராட்சி கூட்டத்தில் 2013-14ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை கமிஷனர் ரவிச்சந்திரன் வழங்க, தலைவர் சாவித்திரி பெற்றுக்கொண்டு பேசியதாவது:

நெற்களஞ்சியம் என, போற்றப்படும் தஞ்சை நகராட்சி கடந்த 1866ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1983ல் முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது. தஞ்சையில் ஆயிரம் ஆண்டுக்கு முன் ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோவில், அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை காண தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு உரிய அடிப்படை வசதி செய்து தரப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கில் கொண்டு 24 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்கா அழகுபடுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி எல்லைக்குள் மரக்கூண்டுடன் கூடிய ஆயிரம் மரக்கன்று நடப்படும். வீட்டுவசதித்துறை அமைச்சர் பரிந்துரைப்படி, உள்ளூர் திட்ட குழுமம் திட்ட மேம்பாட்டு நிதியில், நான்கு கோடியே, 11 லட்சம் மதிப்பில் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வசதிக்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தில், இரண்டு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ளப்படும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வெண்ணாற்றின் குறுக்கே குடிநீரேற்று ஆதாரம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில், மொத்த நிதி வரவு, 136 கோடியே, 27 லட்சம் ரூபாயாகவும், செலவினம், 143 கோடியே, 60 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இதன்படி, மொத்த வருவாயில் நிகர பற்றாக்குறை, ஏழு கோடியே, 33 லட்சம் அதாவது, 5.36 சதவீதம் பற்றாக்குறை ஆக உள்ளது. இதை சமாளிக்க வருவாயை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளும், தேவையற்ற செலவை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய வரிவிதிப்பு ஏதுமின்றி, சுமையற்ற, பட்ஜெட் தயாரித்து, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:

சன் ராமநாதன், தி.மு.க.,: தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட எலீசா நகர், அரசு மருத்துவமனை பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சீர்படுத்த வெண்ணாறு திட்டத்தில் குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் 24 மணிநேரமும் தண்ணீரை இறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் இறைப்பது போதவில்லை. இதை ஆறு மணி நேரமாக உயர்த்த வேண்டும்.

நகராட்சி தலைவர் சாவித்திரி: கணபதி நகர், எலீசா நகர் பகுதியில், குடிநீர் நீரேற்று நிலையம் மூலம் குடிநீரை இறைத்து, சேமிக்க 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்து தர மின்வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, மின்வினியோகம் கிடைத்தால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.

சுவாமிநாதன், அ.தி.மு.க.,: தஞ்சை அருகேயுள்ள டவுன் பஞ்.,ல் கூட பிளாஸ்டிக்கை ஒழித்து விட்டனர். ஆனால், நகராட்சி பகுதியில் ஒழிக்க முடியவில்லை. பிளாஸ்டிக் பொருள் வைத்துள்ள தனியார் கிடங்கு பூட்டை உடைத்து பொருட்களை பறிமுதல் செய்ய, சட்டவிதிமுறைப்படி சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது வியாபாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமிஷனர் ரவிச்சந்திரன்: சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, கலெக்டர், எஸ்.பி., கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுபோல இனி நேராமல் பார்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

கல்வி வளர்ச்சிக்கு 1.60 கோடி ரூபாய்: தஞ்சை நகராட்சியில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, ஒரு கோடியே, 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி பகுதியிலுள்ள பள்ளி கட்டிடங்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும் ஒரு கோடியும், தளவாட இணைப்பு, அலுவலக உபகரணம் வாங்க 14 லட்சம் ரூபாயும், புதிய கட்டிடம் கட் 30 லட்சம் ரூபாயும், மின்நிலை விளக்கு அமைக்க 16 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிறப்பு சான்று இலவசம்: மேலும், சிறப்பு திட்டமாக நகராட்சி பகுதியில் 2012-13 ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு அந்தந்த பிறப்பு, இறப்பு சான்று அலுவலர், சுகாதார ஆய்வாளர் மூலமாக இலவசமாக பிறப்பு சான்று வழங்கப்படும். இதன்படி இரண்டு சான்று நகல்கள் பெற 17 ரூபாய் செலுத்தாமல், வெறும் விண்ணப்பம் அளித்தாலே போதும்.

தமிழகத்தில் முதல்முறை அறிமுகம்

மின்சார செலவை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்திலுள்ள உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்கள், பஞ்.,களில், சோலார் மின்விளக்குகளை அதிகளவில் பொருத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தமிழகத்திலேயே, தஞ்சை நகராட்சியில் முதன்முறையாக, நகராட்சிக்கு உள்பட்ட 17 பள்ளிகளில் சோலார் மின் விளக்கு பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எட்டு துவக்கப்பள்ளி, ஆறு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி, இரண்டு மேல்நிலைப்பள்ளிகளில் சோலார் மின்விளக்கு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பொருத்தப்படுகிறது. இதுதவிர, நகராட்சி பள்ளிகளிலுள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.