கரூர் நகராட்சி பட்ஜெட்; ரூ. 4 கோடி பற்றாக்குறை

Wednesday, 27 March 2013 10:32 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமணி      27.03.2013

கரூர் நகராட்சி பட்ஜெட்; ரூ. 4 கோடி பற்றாக்குறை


கரூர் நகராட்சியில் 2013-14-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 4 கோடி பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டத்துக்கு அதன் தலைவர் எம். செல்வராஜ் தலைமை வகித்து, இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் விவரம்:

வரவு: 2013-14-ம் ஆண்டுக்கு பொது நிதி மூலம் வருவாய் நிதியாக ரூ. 30.56 கோடி, மூலதன நிதியாக ரூ. 17.76 கோடி,  குடிநீர் வடிகால் நிதி மூலம் வருவாய் நிதி ரூ. 10.38 கோடி, மூலதன நிதி ரூ. 55 கோடி. ஆரம்பக் கல்வி நிதி மூலம் வருவாய் நிதி ரூ. 1.87 கோடி, மூலதன நிதி 1.8 கோடி என மொத்த வரவு ரூ. 117.38 கோடி.

செலவு: பொது நிதி மூலம் வருவாய் செலவு ரூ. 30.86 கோடி, மூலதன செலவு ரூ. 16.46 கோடி, குடிநீர் வடிகால் நிதி மூலம் வருவாய் செலவு ரூ. 19.22 கோடி. மூலதன செலவு ரூ. 52.01 கோடி. ஆரம்ப கல்வி நிதி மூலம் வருவாய் செலவு 1.83 கோடி, மூலதன நிதி செலவு ரூ. 1.04 கோடி. மொத்த செலவு ரூ. 121.42 கோடி

மொத்த வரவு ரூ. 117.38 கோடி, மொத்த செலவு ரூ. 121.42 கோடி. பற்றாக்குறை ரூ. 4.04 கோடி.

வெளிநடப்பு: முன்னதாக, நகர்மன்றக் கூட்டம் தொடங்கியவுடன், தேமுதிக உறுப்பினர்கள் நாகராஜ், மாலதி, யமுனா, திமுக உறுப்பினர் நாராயணன், திமுக ஆதரவு உறுப்பினர் ரவிக்குமார், காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீபன் பாபு ஆகியோர் தமிழக சட்டப்பேரவையில் 6 தேமுதிக உறுப்பினர்கள் ஓராண்டுக்கு அவை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

இவர்களில் ஸ்டீபன் பாபு மட்டும் சிறிது நேரம் கழித்து நகர்மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் நடைபெற்ற விவாதம்:

ஜெகதீஸ்: எனது வார்டில் 25 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிரது. குடிநீர் குழாய்களை சீரமைத்து, முறைப்படி குடிநீர் வழங்க வேண்டும்.

எம். செல்வராஜ் (தலைவர்): குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அனைத்து வார்டுகளிலும், ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் பணிகள் நடைபெற்று வருவதால், சில இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன. அவை விரைவில் சரி செய்யப்படும்.

பரமசிவம்: பல வார்டுகளில் குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை. பல வார்டுகளுக்கு குப்பை அள்ள ஒதுக்கப்பட்ட லாரிகள் வேறு இடங்களில் இயங்குகின்றன.

எம். செல்வராஜ் (தலைவர்): அனைத்து வார்டுகளிலும் முறையாக குப்பை அள்ளப்படும்.

ஸ்டீபன் பாபு: மக்கள் வரிப்பணம் பல கோடியில் கட்டப்பட்ட நகராட்சி புதிய கட்டடம் திறக்கப்படாதது ஏன்?

எம். செல்வராஜ் (தலைவர்): சில பணிகள் எஞ்சியுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் புதிய கட்டடத்துக்கு செல்லலாம்.

ஸ்டீபன் பாபு: அடுத்த நகர்மன்றக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெறாவிடில், புதிய கட்டடத்தில் மக்களைத் திரட்டி, நகர்மன்றக் கூட்டம் நடத்துவேன். நீங்கள் எல்லாம் அங்கு வந்து கலந்து கொள்ளும் நிலை ஏற்படும். மேலும், புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

எம். செல்வராஜ்: புதிய பேருந்து நிலையம் தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.