தூத்துக்குடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்

Wednesday, 27 March 2013 10:39 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமணி      27.03.2013

தூத்துக்குடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கை தாக்கல்


தூத்துக்குடி மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கடந்தாண்டு கணக்குப்படி ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் எல்.சசிகலா புஷ்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் சோ. மதுமதி, துணை மேயர் பி. சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின்போது, 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியது:

20012-13 ஆம் ஆண்டில் வரவு-செலவு அறிக்கையை மாமன்றம் அங்கீகரித்ததின்பேரில் 2012-13 ஆம் ஆண்டுக்கு வருவாய் நிதியில் ரூ. 3.92 கோடி பற்றாக்குறை உத்தேசம் ஏற்படும் என உத்தேச வரவு-செலவு அனுமதிக்கப்பட்டது. ஆனால், இறுதிசெய்யப்பட்டதில் ரூ. 3.14 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2013-14 ஆம் ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ. 1.4 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் குடிநீர் நிதியில் ரூ. 4.41 கோடி உபரி வருமானம் வரும் என்றும், கல்வி நிதியில் ரூ. 75.25 லட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் என்றும் உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ. 10.50 கோடியும், அரசு சுழல்நிதியாக ரூ. 21.50 கோடியும், அரசு மானியமாக ரூ. 4.10 கோடியும், ஏனைய வருமானங்கள் மூலமாக ரூ. 6.35 கோடியும் என மொத்தம் ரூ. 42.45 கோடி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், நிகழாண்டுக்காக சாலை பராமரிப்பு மற்றும் கட்டடப் பராமரிப்பு போன்றவைகளுக்காக

ரூ. 1.50 கோடியும், திட்டச் செலவுகளுக்காக ரூ. 10 லட்சமும், பொது சுகாதார பணிகளுக்காக ரூ. 4.25 கோடியும் செலவாகும். சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 38 கோடியும் என மொத்தம் ரூ. 43.85 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை தொகை ரூ. 1.40 கோடியை ஈடு செய்ய செலவினத்தை குறைவு செய்வதின் மூலமும், சொத்துவரி, தொழில்வரி மற்றும் இதர வருமானங்களை அதிகரிப்பதின் மூலமாகவும் சில இனங்களுக்கு அரசு மானியம் பெற முயற்சிகள் மேற்கொண்டும் திருந்திய வரவு-செலவு மதிப்பீடு பட்டியல் படி கண்காணிக்கலாம்.

மேலும், நிகழாண்டில் பக்கிள் ஓடை சீரமைப்பு, புதை சாக்கடை திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் நிதி, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி புனரமைப்புத் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் அரசின் இதர திட்டங்களின் மூலமாக மானியம் மற்றும் கடன் தொகையாக ரூ. 81.31 கோடி வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில்,

ரூ. 78.55 கோடி செலவிடலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் குடிநீர் வரியாக ரூ. 6 கோடியும், அரசு மானியமாக ரூ. 10 கோடியும், இதர வருமானமாக ரூ. 9.36 கோடியும் என மொத்தம் ரூ. 25.36 கோடி வருமானமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரூ. 20.94 கோடி செலவாகலாம் என்றும் உபரியாக

ரூ. 4.41 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, நிகழாண்டில் கல்வி வரியாக ரூ. 2.95 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ரூ. 2.19 கோடி செலவு ஆகும் என்றும் உபரியாக ரூ. 72.25 லட்சம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

முன்னதாக, மாமன்ற உறுப்பினர்கள் அனுமதியுடன் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.