தூத்துக்குடி ரூ.99¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்– தார்சாலை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Tuesday, 26 March 2013 00:00 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினத்தந்தி         26.03.2013

தூத்துக்குடி ரூ.99¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்– தார்சாலை பணிகள் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.99¼ லட்சம் செலவில் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் தார்சாலை பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சசிகலாபுஷ்பா தலைமை தாங்கினார்.

துணை மேயர் சேவியர், ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:–

நடவடிக்கை

வீரபாகு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் இருந்து வாயு வெளியேறியதால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: மக்களை பாதிக்கும் வகையில் எந்த நிறுவனம் செயல்பட்டாலும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கும். மாநகராட்சியின் கீழ் என்னென்ன பணிகள் வரும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருப்பதால், அங்கு உள்ள இயந்திரங்கள் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது காற்றில் வாயு கலந்து மாசு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் பட்சத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அகஸ்டின்: ஸ்டெர்லைட் நிறுவனம் மாநகராட்சி பகுதியில் இருப்பதால் தனியாக வல்லுநர் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். பாதிப்பு இருந்தால், ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உண்மை நிலையை அறிய சிறப்பு நிபுணர் குழு அமைக்க நிர்வாகத்தினரை கேட்டுக் கொள்கிறேன்.

பெரியசாமி: மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டணம் வசூலிக்கும் உரிமம் தொடர்பாக ஏலம் விடுவதில் மாநகராட்சிக்கு இழப்பு வருமா?.

ஆணையாளர்: எந்த ஒரு ஏலமாக இருந்தாலும் அடிப்படைத் தொகை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே இதில் தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் தற்போது தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவிக்காத வகையில் அதிகபட்சமாக அடிப்படை தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தீர்மானங்கள்

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்வதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மற்றும் தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்ஜெட்

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் 2013–14–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2012–13–ம் ஆண்டில் வரவு, மற்றும் செலவினங்கள் இறுதி செய்யப்பட்டதில் ரூ.3 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் பற்றாக்குறை ஏற்பட்டது. 2013–14–ம் நடப்பு ஆண்டுக்கான வருவாய் நிதியில் ரூ.1 கோடியே 40 லட்சம் பற்றாக்குறை ஏற்படும் எனவும், குடிநீர் நிதியில் ரூ.4 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ.75 லட்சத்து 25 ஆயிரம் உபரியாக வருமானம் வரும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டு உள்ளது.