நெல்லையில் ரூ.290 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்: ரூ.3.38 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

Thursday, 28 March 2013 09:32 administrator நாளிதழ்௧ள் - நிதி மேலாண்மை
Print
தினமணி     28.03.2013

நெல்லையில் ரூ.290 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்:  ரூ.3.38 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்


திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் ரூ.3.38 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மேயர் விஜிலா சத்தியானந்த் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ரூ.290 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின்கீழ் மாநகராட்சியில் 2013-14-ம் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

முக்கிய திட்டங்கள் விவரம்:

புதிய குடிநீர்த் திட்டம்: மாநகராட்சியில் இப்போது 11 தலைமை நீரேற்று நிலையங்கள் உள்ளன. இதில் அதிகமானவை சுமார் 30 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டவை. அனைத்து தலைமை நீரேற்று நிலையங்களும் தாமிரவருணி ஆற்றிலுள்ள நீர் உறிஞ்சு கிணறுகளை நம்பி உள்ளன. இவற்றால் நாளடைவில் பலன் அதிகமிருக்காது.

மாநகராட்சியில் மக்கள்தொகை இன்னும் 30 ஆண்டுகளில் 7 லட்சமாக அதிகரிக்கும் நிலை உள்ளதால், மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.290 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம்: தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் ரூ.52 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் கடந்த 1.4.2007-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தில் மாநகரிலுள்ள 21 ஆயிரம் கட்டடங்களுக்கு மட்டுமே இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள பகுதிகளுக்கும் இத் திட்டத்தை ரூ.400 கோடியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தாமிரவருணி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் தாமிரவருணி ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கலக்கும் இடங்களில் கழிவு நீரேற்றம் செய்து பாதாள சாக்கடைத் திட்டத்தை திருப்பிவிட முதல்கட்ட பணிகள் தொடங்கப்படும்.

ஸ்மார்ட் வகுப்பறைகள்: திருநெல்வேலி மாநகராட்சியின் கீழ் செயல்படும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பேட்டை ராணி அண்ணா மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கணினி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க கல்வி நிதியிலிருந்து ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடப்பாண்டில் செயல்படுத்தப்படும்.

மேலும் பள்ளிகளுக்கு புரொஜெக்டர்கள் மற்றும் கணினிகள் வழங்குவதற்காக ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், ஜெனரேட்டர் வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.2 கோடியில் பணிகள் செய்யப்படவுள்ளது.

மழைநீர் சேமிப்புத் திட்டம் கட்டாயம்: மாநகராட்சிக்கு உள்பட்ட கட்டடங்கள், புதிய வரி விதிப்பு, கட்டட அனுமதி மற்றும் வரைபட அனுமதி கோரும்பட்சத்தில் மழைநீர் சேமிப்பு திட்டமானது 1.3.2013-ம் தேதி முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை மண்டலம் இலந்தைகுளம் பகுதியில் சூழலியல் பூங்கா அமைக்க தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய கட்டடங்கள்: தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்டல அலுவலகங்களுக்கு கூடுதல் அலுவலக கட்டடம் கட்டப்படவுள்ளது. திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் முதல் முருகன்குறிச்சி சந்திப்பு வரையில் ரூ.2 லட்சத்தில் பாதசாரிகள் நடைபாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி டவுன் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியில் கலையரங்கம் கட்டப்படும். துப்புரவுப் பணியாளர்களுக்காக ரூ.2 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திமுக வெளிநடப்பு

மாநகராட்சிக் கூட்டம் தொடங்கியதும் திமுக உறுப்பினர் வசந்தா ஜெகதீஸ்வரன், மேயர் விஜிலா சத்தியானந்திடம் மனு ஒன்றை அளித்தார். தனது 11-வது வார்டில் தொய்வின்றி பணிகள் நடைபெற தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இதன்பின்பு அவர், மேயரின் இருக்கைமுன் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார்.

மேயர், பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர். மேயரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து வெளி நடப்பு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் வாசிக்கப்பட்டு முடிந்ததும் அவர்கள் அனைவரும் மீண்டும் கூட்ட அரங்கினுள் வந்து அமர்ந்தனர்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டுவந்ததற்காகவும், மாநகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி அளித்ததற்காகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானங்கள் மேயரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதாக உறுப்பினர் சுப்பிரமணியன் பேசியபோது அதிமுக, திமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக ராஜபட்ச, ராகுல்காந்தி ஆகியோரின் பெயர்களை சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியபோதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

"மக்களை நாடி மாநகராட்சி' சிறப்பு முகாம்கள்

திருநெல்வேலி, மார்ச் 27: திருநெல்வேலி மாநகராட்சியில் மக்களை நாடி மாநகராட்சி என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தபடவுள்ளதாக மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாநகராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள், பிறப்பு-இறப்பு பெயர்த் திருத்தங்கள், சொத்துவரி பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு செய்தல், அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்கள் வசூல் செய்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்பட பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவும் மக்களை நாடி மாநகராட்சி என்ற முகாம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த முகாம் 2 மண்டலங்களில் மாதம் ஒருநாள் நடத்தப்படவுள்ளது.

விரைவு கட்டட அனுமதி திட்டம்: கட்டட அனுமதி தொடர்பான மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு உரிய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து மனு செய்த ஒரு வாரத்துக்குள் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை நிகழாண்டில் செயல்பாட்டுக்கு வருகிறது.

கோடையில் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க தயார் நிலையில் 10 சிறிய குடிநீர் வாகனங்கள் உள்ளன. ரூ.10 லட்சத்தில் மேலப்பாளையத்தில் ஒரு உடற்பயிற்சி மையமும், என்.ஜி.ஓ. காலனி, பெருமாள்புரம் பகுதிகளுக்கு ஒரு உடற்பயிற்சி மையமும் நிறுவப்படும். மாநகராட்சியில் பெண்கள் பயிலும் பள்ளிகளிலும், மகளிர் சுகாதார வளாகங்களிலும் நாப்கின் வெண்டிங் இயந்திரங்களை அமைக்க ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பழைய பேட்டை பகுதியில் ரூ.10 லட்சத்தில் மானிய நிதியுதவியுடன் எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் நேருஜி சிறுவர் கலையரங்க மேடையை விரிவாக்கவும், கலையரங்கை விரிவாக்கவும் ரூ.10 லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நெல்லையப்பர் கோவிலின் 4 ரதவீதிகளிலும் கழிவு நீரோடை அமைத்து அதன்மேல் நடைபாதை, பெண்கள் கழிப்பிடம், குளியலறை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தச்சநல்லூர் அலுவலக வளாகம், பொருள்காட்சி திடல், பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே மாநகராட்சி சார்பில் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிந்துபூந்துறை பள்ளி வளாகத்தில் ஆதரவற்றோருக்கான தங்கும் இரவுநேர புகலிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உள்பட்ட ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு அம்மாவின் பள்ளி சிறார் மருத்துவக் கண்காணிப்புத் திட்டம் இவ்வாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.