சேலம் தனி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் செலவு ரூ37.45 கோடி அரசு மானியமாக ஒதுக்கீடு

Wednesday, 07 August 2013 08:58 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினகரன்          07.08.2013

சேலம் தனி குடிநீர் திட்டத்திற்கு கூடுதல் செலவு ரூ37.45 கோடி அரசு மானியமாக ஒதுக்கீடு

சேலம் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்டத்திற்கான கூடுதல் செலவின தொகை ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது.

சேலம் மாநகராட்சி மக்களுக்கு மேட்டூரில் இருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் குடிநீரை மாநகராட்சி நிர்வாகம் மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் 5, 7 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. மேலும் குடிநீர் குழாயில் அடிக்கடி கசிவு ஏற்படுவதால், குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 2009ம் ஆண்டு சேலம் மாநகராட்சிக்கு என தனி குடிநீர் திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக அப்போது ரூ283.09 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம் பணிகள் துவங்கப்பட்டு, மேட்டூரில் இருந்து சேலம் வரை பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. ஓமலூர் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குழாய் பதிக்கும் பணி மட்டும் நிறைவடையாமல் உள்ளது. அந்த இடத்தில் குழாய் பதிக்க அனுமதிக்கும்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே கடந்த ஆண்டு, தனி குடிநீர் திட்ட செயலாக்கத்திற்கு திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதில், கூடுதலாக ரூ37.45 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டு, ரூ320.54 கோடிக்கு நிர்வாக அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இதையடுத்து கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசே முழு மானியமாக வழங்கிட வேண்டும் என சேலம் மாநகராட்சி நிர்வாகம் கோரியது.

இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி தனி குடிநீர் திட்ட கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்குகிறது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தனி குடிநீர் திட்டத்தை விரைந்து முடித்திட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், இத்திட்டத்திற்கான கூடுதல் செலவினம் ரூ37.45 கோடியை அரசு மானியமாக வழங்கியுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட முதல் நிலை பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநகர பகுதியில் நடக்கும் விநியோக குழாய் மற்றும் பிரதான குழாய் பதிப்பு, 22 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் இரண்டாம் நிலை பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து, மாநகருக்கு குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,‘‘ என்றனர்.